ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி நகராட்சி அதிரடி நடவடிக்கை கொடைக்கானலில் 2 போட் கிளப்களுக்கு சீல்

கொடைக்கானல்: ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி கொடைக்கானலில் 2 போட் கிளப்களுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஏரியில் 4 போட் கிளப்கள் உள்ளன. இதில் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் 2 போட் கிளப்கள், கால்டன் ஓட்டல் நிர்வாகம் சார்பில் ஒரு போட் கிளப், போட் அண்ட் ரோயிங் கிளப் சார்பில் ஒரு போட் கிளப் நடத்தப்பட்டு வந்தது.இந்நிலையில் கொடைக்கானலை சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவர், கொடைக்கானல் ஏரியில் 2 தனியார் கிளப்கள் சார்பில் படகுகளை இயக்குவதன் மூலம், கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது. ஆனால் அரசுக்கோ, நகராட்சிக்கோ பணம் செலுத்துவது கிடையாது. எனவே படகுகளை இயக்க தடை விதிக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த நீதிபதிகள் 2 போட் கிளப்களையும் உடனடியாக மூட உத்தரவிட்டனர். இதையடுத்து கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் முருகேசன், நேற்று போட் அண்ட் ரோயிங் கிளப் போட் கிளப்புக்கு சீல் வைத்தார். மேலும் அங்குள்ள டிக்கெட் கவுன்டர், சிற்றுண்டி நிலையம், 100க்கும் மேற்பட்ட படகுகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து கால்டன் ஓட்டல் நடத்தி வந்த போட் கிளப்பில் இருந்த 15 படகுகளையும் பூட்டி சீல் வைத்தனர். நகராட்சி ஆணையாளர் முருகேசன் கூறுகையில், ‘‘ஐகோர்ட் கிளை உத்தரவின்படி கொடைக்கானலில் 2 போட் கிளப்களையும் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. தற்போது கொடைக்கானல் ஏரியில் தனியார் சார்பில் எந்த படகுகளும் வணிகரீதியாக இயக்கப்படவில்லை ’’ என்றார்.

Related Stories: