முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் பெறப்பட்டதில் 5 லட்சம் மனுக்கள் ஏற்பு : வரும் 20ம் தேதிக்குள் தீர்வு காணப்படும் என தமிழக அரசு அறிவிப்பு

சென்னை : முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் வட்டார அளவில் சேலம் மாவட்டம் கொங்கனாபுரத்தில் வரும் 9-ம் தேதி தொடங்கி வைக்கவும் அதை தொடர்ந்து மாவட்டந்தோறும் வட்டார அளவில் 20ம் தேதிக்குள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம்

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம், முதலமைச்சர் அவர்களால் சட்டப்பேரவை விதி 110-ன் கீழ்  அறிவிக்கப்பட்டு, சேலம் மாவட்டத்தில் துவக்கி வைக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் இந்தத் திட்டத்தின் கீழ் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றனர். இத்திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து,முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  இந்த சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 9,72,216 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 5,11,186 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.  4,37,492 மனுக்கள் பல்வேறு காரணங்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.  மீதமுள்ள 23,538 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து இந்த வார இறுதிக்குள் முடிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.

முதல்வர் பழனிசாமி அதிகாரிகளுக்கு உத்தரவு

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் தொடர்பாக  மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதில் நிலுவையில் உள்ள 23,538 மனுக்கள் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு வரும் 15ம் தேதிக்குள் தீர்வு காண வேண்டும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.  ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வரும் 9ம் தேதியன்று சேலம் மாவட்டம், கொங்கனாபுரத்தில் குறைத்தீர்வு கூட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து மாவட்டம்தோறும் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தலைமையில் கூட்டம் நடத்தி  20ம் தேதிக்குள் மனுக்கள் மீது தீர்வு காண வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டார்.

Related Stories: