திருவள்ளுவர் சிலைக்கு திருநீறு பூசி, ருத்ராட்ச மாலை, காவி துண்டு அணிவித்த இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத் கைது

தஞ்சை: திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை அணிவித்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அர்ஜூன் சம்பத் தஞ்சை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். முன்னதாக தஞ்சை அருகே சாணம் வீசியும் கருப்பு காகிதத்தால் கண்களை மறைத்தும் அவமதிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு அணிவித்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளுவர் சிலைக்கு அவமதிப்பு

தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தின் எதிரே கையில் எழுதுகோள் மற்றும் திருக்குறள் ஏந்தியபடி இருந்த நிலையில் திருவள்ளுவர் சிலை உள்ளது. நேற்று முன்தினம் வள்ளுவர் சிலையின் மீது அடையாளம் தெரியாத சிலர் சாணத்தை வீசியும் கருப்பு காகிதத்தால் கண்களை மறைத்தும் அவமதிப்புச் செய்தனர். இதற்கு அரசியல் தலைவர்கள் தமிழ் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்ததையடுத்து வள்ளுவர் சிலையை அவமதிப்புச் செய்த நபர்களை பிடிக்க 4 தனிப்படைகளை அமைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை அணிவித்த இந்து மக்கள் கட்சி நிறுவனர்

இந்நிலையில் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் காவி துண்டு, திருநீறு பூசி, ருத்ராட்சம் மாலை அணிவித்தும் சூடம் ஏந்தியும் மரியாதையை செலுத்தினார். இதைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் திருவள்ளுவர் சிலைக்கு அணிவிக்கப்பட்ட காவி துண்டு, ருத்ராட்சம் மாலை உள்ளிட்டவற்றையும் காவலர்கள் அகற்றினர்.

அர்ஜூன் சம்பத் கைது

எனினும் தஞ்சையில் திருவள்ளுவர் சிலையை அவமதித்தை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக இலக்கியரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வள்ளுவர் சிலையை அவமதித்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் சாதி, மத ரீதியாக வன்முறையை தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த சூழலில் திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை அணிவித்த இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டார். கும்பகோணம் அடுத்த உடையாளூரில் கைது செய்யப்பட்ட அவரை போலீசார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கியதாக அர்ஜூன் சம்பத் மீது தஞ்சையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Related Stories: