பழைய வண்ணாரப்பேட்டையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்

தண்டையார்பேட்டை: பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், சென்னை மாநகராட்சி மருத்துவ சேவை சார்பில், மத்திய அரசு திட்டமான “பெண் குழந்தைகளை பாதுகாப்போம்”, “பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற திட்டத்தை, சென்னை மாவட்ட கலெக்டர் சீதாலட்சுமி நேற்று தொடங்கி வைத்தார்.  நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாணவிகளுடன் உறுதிமொழி எடுத்துகொண்டனர். பின்னர் மாவட்ட கலெக்டர் சீதாலட்சுமி கூறுகையில், “பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர். இத்திட்டம் பெண் சிசு கொலையை தடுப்பதற்கும், பெண் குழந்தைகள் அனைவரும் கல்வி பெற்று, வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வரவும் வழிவகுக்கும்” என்றார்

மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில், “தமிழக அரசு சார்பில் பெண்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவித்தால் தேர்தல் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். அனைத்து வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி முடிந்துள்ளது. டெங்கு நடவடிக்கைகளை பொறுத்தவரை அபராதம் வசூலிப்பது மட்டும் நோக்கம் அல்ல. டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து இதுவரையில் எங்களுக்கு எந்த ஆய்வு அறிக்கையும் வரவில்லை. சென்னையில் காற்று மாசு கட்டுப்பாடு இல்லை” என்றார்.

நிகழ்ச்சியில், மாநகராட்சி அதிகாரிகள், பள்ளி ஆசிரியர், பள்ளி முதல்வர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: