வங்கக் கடலில் புயல் உருவாகிறது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று இன்று புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை பெய்து வரும் இந்த நேரத்தில் அரபிக் கடல் பகுதியில் உருவான புயல் காரணமாக ஈரப்பதம் உறிஞ்சப்பட்டது. அதனால் ஏற்பட்ட வறண்ட வானிலை காரணமாக தமிழகத்தில் மழை பெய்வது குறைந்துள்ளது.வறண்ட வானிலை காரணமாக தென்தமிழக கடலோர மாவட்டங்களில் வெப்ப சலனம் ஏற்பட்டு ஓரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக மண்டபம் 40 மிமீ, ஆலங்குடி 20 மிமீ, பேராவூரணி 10 மிமீ மழை பெய்துள்ளது. இதற்கிடையே, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக அந்தமான் அருகே ஒரு குறைந்த காற்றழுத்தம் உருவானது. அது தற்போது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அந்தமானுக்கு வட மேற்கு திசையில் நிலை கொண்டுள்ளது.

அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மெல்ல மெல்ல வலுப்பெற்று வருகிறது. இன்று மதியம் அது மேலும் வலுப்பெற்று புயலாக மாறும். புயலாக மாறிய பிறகு அது தீவிரப் புயலாக மாறி வட மேற்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா பகுதிக்கு நகர்ந்து செல்லும். இதன் காரணமாக அந்த பகுதியில் புயல் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழக கடலோர பகுதியில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதனால், கிழக்கு மத்திய கடல் பகுதி மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். கடலில் புயல் சின்னம் உருவானதை உணர்த்தும் வகையில் கடலோரப் பகுதியில் உள்ள முக்கிய துறை முகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: