உயர் ரக மதுபான கடைகளில் ஆப் பாட்டில் மீண்டும் விற்பனை: குடிமகன்கள் மகிழ்ச்சி

வேலூர்: உயர் ரக மதுபான கடைகளில் நிறுத்தப்பட்ட ஆப் பாட்டில் விற்பனைக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், குடிமகன்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் 5 ஆயிரத்து 198 டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வருகிறது. இதில் 500க்கும் மேற்பட்ட உயர் ரக மதுபான கடைகளும் உள்ளன. இந்த உயர் ரக மதுபான கடைகளில் உள்நாட்டு மதுபான வகைகள் மட்டுமின்றி, வெளிநாட்டு  மதுபான வகைகளும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், உயர் ரக மதுபான கடைகளில் 180 மில்லி லிட்டர் அளவுகொண்ட குவாட்டர் பாட்டில்கள் விற்பனைக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தடை விதிக்கப்பட்டது. இதனால், 375  மில்லி லிட்டர் அளவு கொண்ட ஆப் பாட்டில்கள் மற்றும் 750 மில்லி லிட்டர் அளவு கொண்ட புல் பாட்டில்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது.

இதற்கிடையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உயர் ரக மதுபான கடைகளில் ஆப் பாட்டில்கள் விற்பனைக்கும் தடைவிதிக்கப்பட்டது. இதனால், புல் பாட்டில் வாங்குபவர்கள் மட்டுமே உயர் ரக மதுபான கடைகளுக்கு செல்லும் சூழ்நிலை  உருவானது. அதேவேளையில் அவற்றின் விற்பனையும் குறைந்தது. இதனால் குடிமகன்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது.  இந்நிலையில், உயர் ரக மதுபான கடைகளில் நேற்று முதல் மீண்டும் ஆப் பாட்டில்கள் விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, உயர் ரக மதுபான கடைகளுக்கு ஆப் பாட்டில்கள்  விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதனால், குடிமகன்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து குடிமகன்கள் கூறுகையில், ‘சாதாரண மதுக்கடைகளில் போலிகள் புழக்கத்தில் வரும் என்ற அச்சத்தால் உயர் ரக மதுபான கடைகளை நாடுகிறோம். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உயர் ரக ஆப் மது பாட்டில்களுக்கு திடீரென  தடைவிதித்திருந்தனர்.  இதனால், புல் பாட்டில்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது, மீண்டும் ஆப் பாட்டில்கள் விற்பனைக்கு உயர் ரக மதுபான கடைகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், விலை உயர்ந்த குவாட்டர்  பாட்டில்களையும் விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: