நிரந்தரமாக விடுமுறை நாட்களில் 50 சதவீதக் கட்டணக் குறைப்பு எப்போது? மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: பண்டிகை நாட்கள், விடுமுறை நாட்களில் ரயில் கட்டணத்தைப் பாதியாகக் குறைத்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் போக்குவரத்துப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. லட்சக்கணக்கான இருசக்கர வாகனங்கள், கார்கள், அரசுப் பேருந்து, ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள், செங்கல்பட்டு வரை செல்லும் மின்சார ரயில், பறக்கும் ரயில், ஓலா, ஊபர் கால் டாக்ஸிகள் என இருந்தும் போக்குவரத்துக்கான தேவை உள்ளது. சென்னையில் மெட்ரோ ரயிலுக்காகத் திட்டமிடப்பட்டு பல ஆண்டுகள் நடைபெற்ற பணி முடிந்து சென்னை மெட்ரோவின் முதல் கட்ட சேவை ஆலந்தூர், சென்னை கோயம்பேடு இடையே ஜூன் 29, 2015 ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது.

மெட்ரோ ரயில் பணிகள் தற்போது முழுமையாக முடிவடைந்து இரண்டு பிரிவுகளாக இயங்குகிறது. தற்போதுள்ள ஸ்டேஷன்கள் இயக்கப்படும் பகுதிகள்: முதல் பகுதி:

வண்ணாரப்பேட்டை - மண்ணடி - சென்னை கோட்டை - சென்னை சென்ட்ரல் - அரசு வளாகம் - எல்.ஐ.சி - ஆயிரம் விளக்கு - அண்ணா மேம்பாலம் - தேனாம்பேட்டை - நந்தனம் - சைதாப்பேட்டை - கிண்டி - ஆலந்தூர் - மீனம்பாக்கம் - சென்னை பன்னாட்டு விமான நிலையம் நீளம்: 23.085 கி.மீ. ( இதில் 14.3 கி.மீ. தரைக்கடியில்)

இரண்டாவது பகுதி:

சென்னை சென்ட்ரல் - சென்னை எழும்பூர் - வேப்பேரி - ஷெனாய் நகர் - அண்ணா நகர் - திருமங்கலம் - அரும்பாக்கம் - சென்னை புறநகர் பேருந்து நிலையம் - வடபழனி - அசோக் நகர் - ஈக்காட்டுத்தாங்கல் - ஆலந்தூர் - பரங்கி மலை. நீளம்: 21.961 கி.மீ. ( இதில் 9.7 கி.மீ. தரைக்கடியில்) இது தவிர வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் வரை பாதை அமைக்கும் பணி நடக்கிறது.

அதிநவீன குளிர்சாதன வசதி, துல்லியமான நேரத்திற்குள் குறிப்பிட்ட இடத்திற்குப் போய் சேர்வது, எக்காரணம் கொண்டும் காத்திருக்கத் தேவை இல்லாதது, மிகப் பாதுகாப்பான பயணம் என பல வசதிகளைக் கொண்டிருக்கும் மெட்ரோ ரயிலில் கட்டணம் அதிகம் என ஒரு சாரரும், ஆட்டோ, கால் டாக்ஸி, மோட்டார் பைக்கில் வருவதை ஒப்பிட்டால் மிகக்குறைவு, விரைவாகவும் சென்று சேர முடிகிறது என ஒரு சாரரும் தெரிவிக்கின்றனர்.

ஆனாலும் கட்டண உயர்வு காரணமாக கூட்டம் சற்று குறைவாகவே உள்ளது. இந்நிலையில் பயணிகளைக் கவர மெட்ரோ நிர்வாகம் பல சலுகைகளை அளிக்கிறது. ரயில் நிலையத்தில் இறங்கியவுடன் மற்ற இடங்களுக்குச் செல்ல குறைந்த வாடகையில் வேன், மினி வேன், கார்கள், சைக்கிள் உள்ளிட்டவற்றை வழங்குகிறது. தினமும் பல இடங்களுக்குச் செல்பவர்களுக்காக ரூ.100 கொடுத்து டிக்கெட் எடுத்தால் நாள் முழுவதும் யார் வேண்டுமானாலும் அந்த டிக்கெட்டைப் பயன்படுத்தி பயணம் செய்யலாம் என்ற வசதியுடன் டிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர மாதாந்திர சீசன் டிக்கெட், பார்க்கிங் வசதி, பொருட்களை வைக்கும் வசதி உள்ளிட்டவற்றை அமல்படுத்தியுள்ளது. தற்போது 50 சதவீதக் கட்டணத்தில் பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளது. அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் மெட்ரோ பயணச் சீட்டுகளில் 50 சதவீதக் கட்டணத் தள்ளுபடி செய்து ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் தீபாவளிப் பண்டிகையையொட்டி சோதனை அடிப்படையில் அறிவிப்பை வெளியிட்ட நிலையில் தற்போது நிரந்தரமாக விடுமுறை நாட்களில் 50 சதவீதக் கட்டணக் குறைப்பை அறிவித்துள்ளது. விடுமுறை நாட்களில் வெளியே செல்லும் பயணிகள் அதிகம் பயன்படுத்துவார்கள் என மெட்ரோ நிர்வாகம் எதிர்பார்க்கிறது.

Related Stories: