கூடங்குளம் அணு உலை தகவல் ஹேக் செய்யப்பட்டது; தென் கொரிய உளவு அமைப்பின் தகவலால் அதிர்ச்சி

சியோல்: கூடங்குளம் அணு உலை தொடர்பாக இணையதளத்தில் இணைய ஊடுருவிகள் ஊடுருவியிருப்பது உண்மை தான் என தென்கொரியா கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இணையதள தாக்குதல் நடந்ததாக புகார்கள் கடந்த வாரத்தில் எழுந்தது. இது இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் வடகொரியாவை சார்ந்த ஹேக்கர்ஸ் தான் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தினார்கள் என தென்கொரியாவை சார்ந்த ஒரு புலனாய்வு அமைப்பு ஆதாரத்துடன் தற்போது தகவல்களை வெளியிட்டுள்ளது.

மேலும் தென்கொரிய புலனாய்வு அமைப்பு இவர்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்தை மட்டுமல்லாமல் கூடங்குளம் அணுமின் நிலைய கட்டுமான, திட்டமிடும் போது பணியில் இருந்த இந்திய அணுசக்தி துறையின் முன்னாள் சேர்மன் மற்றும் இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஆகியோர்களின் வீடுகளில் உள்ள கணினியிலும் இந்த தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலையத்தை பொறுத்தவரை முதல் 2 அணு உலைகளில் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில்,

மேலும் 4 அணு உலைகள் ரஷ்ய நாட்டு உதவியுடன் கட்டப்பட்டு வருகிறது. இந்த இணையதள தாக்குதல் மூலம் கூடங்குளம் அணுமின் நிலையத்தை செயலிழக்க செய்யலாம் என்றும், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து கதிர் வீச்சை வெளிப்படுத்தவும் செய்யலாம் எனவும் இந்த புலனாய்வு அமைப்பு செய்திகளை வெளியிட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் இது குறித்து முதலில் மறுப்பு தெரிவித்தாலும், அதன் பிறகு இந்திய அணுசக்தி துறையின் தலைமை இடமான மும்பையை சேர்ந்த அதிகாரிகள் இது உண்மை தான் என அவர்கள் செய்தி குறிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறு முரண்பட்ட கருத்துக்களால் ஏற்கவே பீதியில் உள்ள இந்த பகுதி மக்கள், தற்போது தென்கொரிய புலனாய்வு அமைப்பு வெளியிட்ட தகவலால் மக்கள் மீண்டும் பீதி அடைந்துள்ளனர். ஆனால் இந்திய அணுசக்தி துறையோ இதுவரை எந்தவிதமான வெள்ளை அறிக்கையோ, அல்லது இது சம்மந்தமாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான எந்த முயற்சியும் ஏற்படுத்தத்தவில்லை. கடந்த செப்.4-ம் தேதி இந்த இணையதள தாக்குதல் நடத்தப்பட்டது உறுதிசெய்யப்பட்டது என்ற போதிலும் இதுவரை எந்த விதமான அறிக்கையை மத்திய, மாநில, அரசுகளோ, இந்திய அணுசக்தி இயக்குநரகமோ, குறைந்தபட்சம் மாவட்ட நிர்வாகமோ இது குறித்து கருத்து கூறவில்லை.

இந்தியாவை பொறுத்தவரை இந்திய அணுசக்தி உற்பத்தி கழகங்களில் பல்வேறு ஆராட்சிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் இந்த தொழில்நுட்பத்தில் இந்தியா தற்போது முன்னேற்றத்தில் வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த தகவல்களை அவர்கள் திருடுவதற்காக அவர்கள் முதற்கட்டமாக 2008 முதல் வடகொரியா ஹேக்கர்ஸ் முயன்று வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தற்போது கூடங்குளம் அணுமின் உலை பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளதால் இது குறித்து ஒரு முழு அறிக்கையை வெளியிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர். 

Related Stories: