நீட் தேர்வால் ஏழை மாணவர்களுக்கு கடும் பாதிப்பு,..பயிற்சி மையங்களுக்குத்தான் பெரும் லாபம்: மத்திய அரசு கவனிக்க ஐகோர்ட் வலியுறுத்தல்

* 5 லட்சம் வரை வசூலித்தால் ஏழை மாணவர்களால் எவ்வாறு நீட் பயிற்சி பெற முடியும்?

* ஆசிரியர்களை விட குறைவாக சம்பளம் தந்து மருத்துவர்களுக்கு தமிழக அரசு அநீதி இழைத்துவிட்டது.

சென்னை: நீட் தேர்வால் பயிற்சி மையங்களுக்குத்தான் பெரும் லாபம் கிடைக்கிறது. ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பையே ஏற்படுத்துகிறது என்றும், இதை மத்திய அரசு கவனிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நீட் ஆள்மாறாட்டம் தொடர்பான  வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மருத்துவ மாணவர்களின் கைரேகை பதிவுகளை சிபிசிஐடியிடம் வழங்குமாறு நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், அரசு மருத்துவ கல்லூரிகள், தேசிய தேர்வு ஏஜென்சி ஆகியோருக்கு கடந்த மாதம்  உத்தரவிட்டிருந்தது.  இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது, நீட் பயிற்சி மையங்கள் குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்தது. அதில், அரசு மருத்துவ கல்லூரியில் இந்தாண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள 3081 மாணவர்களில் 48 பேர் மட்டும் நீட் பயிற்சி மையத்தில் பயிலாதவர்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

 அப்போது, நீட் பயிற்சி மையங்கள் 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை கட்டணம் வசூலிப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.. இதைக்கேட்ட நீதிபதிகள், தனியார் நீட் பயிற்சி மையங்கள் 5 லட்சம் வரை பயிற்சி  கட்டணம் வசூலித்தால் ஏழை மாணவர்களால் எவ்வாறு நீட் பயிற்சி பெற முடியும். ஏழை மாணவர்களுக்காக மருத்துவ கல்லூரிகள் திறக்கப்படுவதில்லை.  மருத்துவ படிப்பு அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் சமமாக இருக்க வேண்டும். பல லட்சம் ரூபாய் கொடுத்து மருத்துவ படிப்பு சேரும் முறையை மாற்ற நீட் தேர்வு கொண்டு வந்ததாக மத்திய அரசு கூறும் நிலையில், நீட் தேர்வு பயிற்சிக்காக அதிகளவில்  கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் பணியில் இருக்கும் அரசு மருத்துவர்களுக்கு மாதம் 57 ஆயிரம்தான் ஊதியம் வழங்கப்படுகிறது. இது அரசு பள்ளி ஆசிரியர்களை விட மிக குறைவானது. புனிதமான பணியை செய்து வரும்  மருத்துவர்களுக்கு தமிழக அரசு அநீதி இழைத்துவிட்டது என்று கருத்து தெரிவித்தனர்.

இதனையடுத்து, நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு: தேசிய தேர்வு ஏஜென்சி தாக்கல் செய்த அறிக்கையில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் 9676 மாணவர்கள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் படிக்கும் 1250 மாணவர்களின் கைரேகை பதிவு சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வாதிடும்போது, கைரேகைகளை ஆய்வு செய்து அடுத்த விசாரணைக்கு முன்பு அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யும் என்று கூறியுள்ளார். மற்ற மாநிலங்களிலும் இதுபோன்று நீட் ஆள்மாறாட்டம், முறைகேடு நடந்துள்ளதா என்று இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவிக்க வேண்டும்.சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் 52 மாணவர்கள் மட்டுமே பயிற்சி மையங்களுக்கு செல்லாமல் நீட் தேர்வில் வெற்றி பெற்று சேர்க்கை பெற்றுள்ளனர். 1590 பேர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்கள். 1040 மாணவர்கள் முதல் தேர்விலேயே வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்தவர்கள். 2041 பேர் இரு முறை தேர்வு எழுதியவர்கள்.

நீட் தேர்வில் சரிசமமான நடைமுறையை மத்திய அரசு பின்பற்றவில்லை. நீட் தேர்வால் பயிற்சி மையங்களுக்குத்தான் லாபம். அந்த மையங்களில் படிப்பவர்களுக்கு மட்டுமே மருத்துவப் படிப்பு சாத்தியமாகியுள்ளது.  ஏழை மாணவர்களும், கிராமப்புற மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இதை சட்ட திருத்தம் கொண்டு வரும் மத்திய அரசு கவனிக்க வேண்டும். நீட் ஆள் மாறாட்டம் தொடர்பாக சிபிஐக்கு ஏதாவது புகார் வந்துள்ளதா என்று சிபிஐ தெரிவிக்க வேண்டும். வழக்கு வரும் 7ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: