பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கு விசாரணை அறிக்கையை 3ம் நபருக்கு தர முடியாது: உயர் நீதிமன்றத்தில் சிபிஐ திட்டவட்டம்

சென்னை:  பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் நடந்த உண்மையை கண்டறிய உண்மை கண்டறியும் குழுவை அமைக்க வேண்டும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உளவியல் ஆலோசனை உள்ளிட்ட உதவிகள் வழங்க அனைத்து மாவட்டங்களிலும் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் புகார் குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளோடு தமிழ்நாடு பெண் வழக்கறிஞர் சங்க தலைவர் சாந்த குமாரி உள்ளிட்ட 10 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.  இந்த வழக்கு  பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி மற்றும் சரவணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணை தொடர்பான அறிக்கையை சிபிஐ வெளியிட வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான வக்கீல், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிபிஐ விசாரணை தொடங்கியது. இதுவரை 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த வழக்கின் இடைக்கால குற்றப்பத்திரிகை கடந்த  ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம் தேதி கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த வழக்கை உயர் நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும் இடைக்கால குற்றப்பத்திரிகையை சென்னை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மனுதாரர்களுக்கும் தர வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல், விசாரணை அறிக்கையை எங்களிடம் சிபிஐ தரவில்லை என்று வாதிட்டார்.அப்போது, சிபிஐ வக்கீல் சீனிவாசன் ஆஜராகி, பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பான விசாரணை ரகசியமாக நடந்து வருகிறது. இந்த விசாரணை அறிக்கையை மூன்றாம் நபருக்கு தர முடியாது. விசாரணைக்கு உதவ வேண்டுமானால் மனுதாரர்கள் தங்களிடம் உள்ள ஆதாரங்களை சிபிஐயிடம் தரலாம். விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் அப்போதைக்கப்போது சிபிஐ சீலிட்ட கவரில் தாக்கல் செய்வதில் எந்த சிரமமும் இல்லை என்றார்.

 இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் மனுதாரர்கள் சிபிஐக்கு உதவலாம். வழக்கு விசாரணையின் முன்னேற்றம் குறித்த விசாரணை அறிக்கையை அப்போதைக்கப்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 3ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: