குமரியில் அனுமதியின்றி இயக்கப்படும் கேரள மாநில ஆட்டோக்கள்: நடவடிக்கை எடுக்கப்படுமா?

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி கேரள மாநில பதிவெண் கொண்ட ஆட்ேடாக்கள் அதிக அளவு இயக்கப்பட்டு வருகிறது. அந்த ஆட்டோ மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. குமரி மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நகர பேருந்துகளும், வெளிமாவட்டங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதே போல் கிராமபுறப்பகுதி மக்கள் வசதிக்காக மாவட்டத்தில் மினிபஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மினிபஸ்களில் பல பஸ்கள் அனுமதி வாங்கப்பட்ட தடத்தில் இயக்காமல் வேறு தடங்களில் இயக்கப்படுவதால் அரசு போக்குவரத்து கழகத்திற்கு வருமானம் இழப்பு ஏற்பட்டு வருகிறது.  மேலும் மேற்கு மாவட்ட பகுதிகளில் அனுமதியின்றி வேன்களில் டிக்கெட் வசூலித்து பயணிகளை ஏற்றிச்செல்லும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க கேரள மாநிலத்தில் இயக்க அனுமதி பெறப்பட்ட ஆம்னி பஸ்கள் குமரி மாவட்டத்தில் பல பகுதிகளில் நிறுத்தப்பட்டு, சுற்றுலா, மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள வாடகை வேன் ஓட்டுபவர்களுக்கு பலத்த அடியாக உள்ளது.

இது குறித்து சில நேரங்களில் வட்டாரபோக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும், பல வழிகளில் நெருக்கடியால் அதனை முழுமையாக தடைசெய்ய முடியாமல் அதிகாரிகள் திணறிவருகின்றனர். இதுபோல் கேரள மாநிலத்தில் உள்ள ஆட்டோக்கள் அதிக அளவு குமரி மாவட்டத்திற்குள் பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்து செல்கிறது. இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். ஆனால் குமரி மாவட்டத்தில் உள்ள ஆட்டோக்களை கேரள மாநிலத்திற்குள் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அனுமதிப்பது இல்ைல. ஆனால் குமரி மாவட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் சர்வசாதரணமாக கேரள மாநில ஆட்டோக்கள் குமரி மாவட்டத்திற்குள் வந்து செல்கிறது.

இது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது கூறியதாவது: ஆட்டோ வைத்திருக்கும் உரிமையாளரின் வீட்டில் இருந்து 15 கிலோ மீட்டர் சுற்றளவிற்குதான் ஆட்டோவை ஓட்டதான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த கிலோ மீட்டரை தாண்டி ஓட்டக்கூடாது. அப்படி ஓட்டும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கலாம். அதனை தவிர வேறு மாவட்டம், மாநிலங்களுக்கு ஆட்டோக்களை இயக்கவேண்டும் என்றால் உரிய அனுமதி பெறவேண்டும். கேரள மாநில பதிவெண் கொண்ட ஆட்டோக்கள் குமரி மாவட்டத்திற்கு வருவதாக புகார்கள் வருகின்றன. சோதனை நடத்தி உரிய அனுமதியின்றி இயக்கப்படும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories: