தமிழக ஆளுநருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு: தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து விவாதித்ததாக தகவல்

சென்னை: சென்னை ராஜ்பவனில் ஆளுநருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து பேசினார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இடையே 30 நிமிட சந்திப்பு நடைபெற்றது. இருவரின் சந்திப்பின் போது தலைமை செயலர் சண்முகம், டிஜிபி திரிபாதி ஆகியோர் உடன் இருந்தனர். இன்று, தஞ்சாவூரில் திருவள்ளுவர் சிலை அவமதிப்பு சர்ச்சை தொடர்பாக பேசுவார்கள் என தகவல்கள் வெளியாகின. தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளுவர் சிலை மீது மர்ம நபர்கள் சாணத்தை வீசிச் சென்ற சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தஞ்சாவூரை அடுத்து வல்லம் செல்லும் வழியில் பிள்ளையார்பட்டி எனும் பகுதி அமைந்துள்ளது. இங்கு சுமார் 5,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில், அதிகாலை 5 மணியளவில் பஞ்சாயத்து யூனியன் அலுவகத்தில் அமைத்துள்ள திருவள்ளுவர் சிலையை மர்மநபர்கள் 10க்கும் மேற்பட்டோர் சாணி மற்றும் கருப்புத்துணிகளால் அவமதித்துள்ளனர்.

நேற்று தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் அந்நாட்டு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிட்டிருந்தார். இதையடுத்து தமிழகத்தில் உள்ள பாஜக நிர்வாகிகள் திருவள்ளுவரின் உடையை காவி நிறத்தில் உள்ளவாறு அமைத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். மேலும் தாய்லாந்தில் வெளியிடப்பட்ட புத்தகத்திலும் திருவள்ளுவர் காவி உடை அணிந்திருப்பது போன்று இருந்தது. இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தஞ்சாவூரில் உள்ள திருவள்ளுவர் சிலை மர்ம நபர்களால் இன்று அவமதிக்கப்பட்டுள்ளது. இந்த விவாகரம், தமிழகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் சிலையை அவமதித்தவர்களை கண்டுபிடிக்க டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மர்மநபர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆளுநர் பன்வாரிலால் பிரோகித்தை திருவள்ளுவர் சிலை சர்ச்சை தொடர்பாக முதல்வர் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகின. சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில், தமிழக சட்டம் ஒழுங்கு, தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து இருவரும் விவாதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories: