டெல்லி காற்றுமாசு விவகாரம்: பஞ்சாப், ஹரியானா, உ.பி. மாநில தலைமை செயலாளர்களுக்கு உச்சநீதிமன்றம் சம்மன்

புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசு அதிகரித்து உள்ளது குறித்து 3 மாநில தலைமைச் செயலாளர்கள் விளக்கம் தர வேண்டும் என உச்சநீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் புதன்கிழமை ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காற்று அசுத்தம் அடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரியை பணிநீக்கம் செய்யவும் மாநில அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அருண் மிஸ்ரா மற்றும் தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த அமர்வு  மத்திய அரசுக்கும், பஞ்சாப், ஹரியானா மாநில அரசுகளுக்கும் பல்வேறு சரமாரி கேள்விகளை தொடர்ந்து எழுப்பினர். குறிப்பாக காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தவில்லை என்றால் மக்கள் வாழமுடியாத சூழல் உருவாகிவிடும் என்றும் கருத்து தெரிவித்தனர். மத்திய மாநில அரசுகள் ஒன்றுக்கொன்று குறைகூறாமல் ஒருமித்தக் கருத்துடன் செயல்படவேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

எமர்ஜென்சியை விட டெல்லியில் காற்று மாசு மிக மோசமாக உள்ளதாக உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. டெல்லியில் நிலவும் கடுமையான மாசுபாட்டிற்கு பயிர்கழிவுகள் எரிப்பு தான் காரணம் என்றால், இது தொடர்பான மாநில அரசுகளும், கிராம பஞ்சாயத்துகளும் தான் முழு பொறுப்பு என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் நாங்கள் இதனை விட்டுவைக்கப்போவதில்லை. இந்த மாசுபாட்டிற்கு அனைவரும் பொறுப்பேற்கவேண்டும் என்றும் உடனடியாக இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என கருத்து தெரிவித்தனர். காற்று மாசுபாட்டால் மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் வாழ்நாள் என்பது குறைந்து வருகிறது. மேலும் டெல்லி மனிதர்கள் வாழ முடியாத இடமாக மாறி வருகிறது. இதற்கு உடனடியாக தீர்வு காண டெல்லி ஐ.ஐ.டி.நிபுணர், சுற்றுசூழல் நிபுணர்கள் ஆகியோரை அரை மணி நேரத்திற்குள் அழைத்து காற்று மாசு தடுப்பு நடவடிக்கை தொடர்பான  பரிந்துரைகளை எங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளனர். மேலும், காற்று மாசு தொடர்பாக 3 மாநில தலைமை செயலாளர்கள் நவம்பர் 6ம் தேதி ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: