டிஜிட்டல் கீ-லாக்கர் நடைமுறையை விரிவுபடுத்த திட்டம்: மெட்ரோ ரயில் அதிகாரி தகவல்

சென்னை: மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு பல்வேறு சேவைகளை மெட்ரோ நிர்வாகம் வழங்கி வருகிறது. குறிப்பாக, பயணிகள் தங்களின் உடமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தியும் வருகிறது.  இந்தநிலையில், கடந்த மாதம் 31ம் தேதி வடபழனி, ஆலந்தூர், திருமங்கலம் ஆகிய 3 மெட்ரோ ரயில் நிலையங்களில் டிஜிட்டல் கீ-லாக்கர் திட்டத்தை நிர்வாகம் கொண்டுவந்தது. சீரான இடவசதி கொண்ட அதாவது 10 கிலோ வரையிலும் பொருட்களை வைப்பதற்கான லாக்கருக்கு 3 மணி நேரத்திற்கு ரூ.30, 3 முதல் 5 மணி நேரத்திற்கு ரூ.50, 5 முதல் 12 மணி நேரத்திற்கு ரூ.100ம், பெரிய அளவிலான லாக்கர்களை பெற 3  முதல் 5 மணி நேரத்திற்கு ரூ.100ம், 12 மணி நேரத்திற்கு ரூ.250ம்  கட்டணமாக இதில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: ஐடி கம்பெனிகளுக்கு செல்பவர்கள் இதை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். வெளி இடங்களுக்கு பொருட்களை கொண்டு செல்ல முடியாதவர்களும் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர். நாள்தோறும் 30 முதல் 40 பேர் வரையில்  இதை பயன்படுத்துகின்றனர். இத்திட்டத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளதால் மேற்கொண்டு விரிவுபடுத்தலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: