டெல்லியில் போலீஸ்-வக்கீல்கள் மோதல் பார் கவுன்சில் தலைவர் கண்டனம்

சென்னை: டெல்லி நீதிமன்ற வழக்கறிஞர்களை, போலீசார் தாக்கிய விவகாரத்துக்கு தமிழ்நாடு பார்கவுன்சில் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் கூறியதாவது: டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் போலீசார், வக்கீல்களை கடுமையாக தாக்கியுள்ளனர். அதில் ரஞ்சித் சிங் மாலிக் என்ற வக்கீலை  துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அவர் மிகவும் பாதிப்படைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் பல வக்கீல்கள் போலீசாரின் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த  செயலில் ஈடுபட்ட காவல்துறையை தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் வன்மையாக கண்டிக்கிறது. மேலும், இந்த செயலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது, ஐபிசி சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்வது மட்டுமில்லாமல், தூப்பாக்கி போன்ற ஆயுதங்களால் சுட்டதால், ஆயுத சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

துப்பாக்கியால் சுடப்பட்ட வக்கீலுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும், காயமடைந்த மற்ற வழக்கறிஞர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடும் அரசு வழங்கிட வேண்டும்.  இந்த விவகாரத்தை பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு  உடனடியாக விசாரித்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த விவகாரத்தை போலீஸ் விசாரிக்க கூடாது. ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் போலீசார், வக்கீல்களை தாக்கிய சம்பவம் தொடர்பான வழக்கு இன்னும்  நிலுவையில் உள்ளது. அது போன்று இந்த வழக்கையும் விட்டுவிடாமல் உடனடியாக விசாரித்து 90 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும். அப்போது தான், மேலும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடாமல் இருப்பார்கள். மேலும் இந்த விவகாரம்  தொடர்பாக தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் நாளை(இன்று) அவசர கூட்டம் ஒன்றை கூட்ட உள்ளது. மீண்டும் தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறைக்கு தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது.

Related Stories: