அனுமதி பெறாத பார்களை ஆய்வு செய்ய வேண்டும்: மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் அனுமதி பெறாமல் இயங்கும் டாஸ்மாக் பார்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.  தமிழகத்தில் உள்ள 5,152 டாஸ்மாக் கடைகளுடன் இணைந்து 1,872 மதுக்கூடங்கள் செயல்பட்டு வந்தது. இந்தநிலையில், அனுமதி பெறாமல் இயங்கும் டாஸ்மாக் பார்களை தடுக்க அதிகாரிகளை தீவிர ஆய்வில் ஈடுபடும்படி டாஸ்மாக் நிர்வாகம்  உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள், முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் பரக்கும் படை அலுவலர்கள் தீவிர ஆய்வினை மேற்கொண்டு வந்தனர். இந்த ஆய்வின் மூலம் அரசு அனுமதி பெறாமல் இயங்கி வந்த 500க்கும் மேற்பட்ட பார்கள் மூடி சீல் வைக்கப்பட்டது. இந்தநிலையில், மீண்டும் சட்டத்திற்கு புறம்பான பார்கள் தலைதூக்கியுள்ளதாக தலைமை அலுவலகத்திற்கு புகார்கள்  வந்தவாறு உள்ளது.

குறிப்பாக, மணலி, அம்பத்தூர், ஆவடி, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளில் அரசு அனுமதி பெறாத பார்கள் மீண்டும் அதிக அளவில் செயல்பட துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இந்த புகாரின் அடிப்படையில் அனுமதி பெறாத பார்களை  கட்டுப்படுத்த தீவிர ஆய்வினை மேற்கொள்ள மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாதாந்திர ஆய்வுக்குழு கூட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் பார்கள் குறித்து பேசப்பட்டது. புதிய டெண்டருக்கு பிறகும் பல இடங்களில் அனுமதி பெறாத பார்கள் தலைதூக்கி வருவது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்படி,  உடனடியாக தீவிர ஆய்வினை மேற்கொண்டு மூடவும், இதுகுறித்த அறிக்கையை அனுப்பவும் மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வாரம்தோறும் 20 கடைகளை ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு புகார்களுக்கு ஆளான சில மாவட்ட மேலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

Related Stories: