காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்: குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு

சென்னை : காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று குடியரசு துணை தலைவர் வெங்கையாநாயுடு பேசினார். தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் 25ம் ஆண்டு விழா நிகழ்ச்சி சென்னை பள்ளிக்கரணையில் நேற்று நடைபெற்றது. இதில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய சுகாதாரத்  துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வெள்ளிவிழாவை முன்னிட்டு தேசிய கடல்சார் தொழில்நுட்ப  கழகத்தின் தபால் தலைகளை வெளியிட்ட குடியரசு துணை தலைவர், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுகளையும் வழங்கினார்.இந்த விழாவில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு பேசியதாவது:வெள்ளிவிழா காணும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப கழகத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்நிறுவனம் கடல் சார்ந்த ஆராய்ச்சிகளில் முக்கிய  பங்கு வகிக்கிறது. நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்கிறது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியா கடல் ஆராய்ச்சியில் ஒரு போர் நடத்தியது. இந்தியா 7500 கி.மீ கடல் அளவு கொண்டுள்ளது. அதேபோல் அழகிய தமிழ்நாடும்  நீளமான கடலை கொண்டுள்ளது. முதலாம் நூற்றாண்டில் சோழர்களால் அமைக்கப்பட்ட பூம்புகார் நகரம் கடல்சார் கட்டமைப்பில் நாம் சிறந்து விளங்கியதற்கான சான்று. அயல்நாடுகளுடனான வர்த்தகத்தில் தமிழக மன்னர்கள் சிறப்புடன்  விளங்கினர்.

தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க அதிகளவில் கடல்நீரை சேமிக்க வேண்டும். அதற்கு தேவையான பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு இயற்கை நேசித்து அதனை  பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதேபோல் வெப்பநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த தேவையான அறிவியல் ஆராய்ச்சிகளை நாம் மேற்கோள்ள வேண்டும். நம் நாடு அறிவியல் ஆராய்ச்சியில் சிறந்து விளங்க அதிகளவில் ஆய்வுகள் செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி கடல்  சார்ந்த ஆராய்ச்சி, பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் முன்னேற்றம் அடைய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இதனைத் தொடர்ந்து பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பேசுகையில், ‘உலகிலேயே சுனாமி மற்றும் பேரிடர் எச்சரிக்கை அளிக்கும் நவீன தொழில்நுட்பங்களை கொண்டுள்ள நாடாக இந்தியா இருப்பது பெருமை  அளிக்கிறது. அமெரிக்காவை விட இந்தியா தான் வானிலை அறிக்கை, கடல் சார்ந்த தகவல்களை அளிப்பதில் முதலிடம் வகிப்பதாக உலக நாடுகள் ஒப்புக்கொண்டு உள்ளன. அதேபோல் மீனவர்களுக்கு நாட்டில் நிலவும் காலநிலையை  தெரியப்படுத்தவும் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அறிவியல் தொழில்நுட்பம் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் இந்தியா முதன்மை இடத்தை பெற்றுள்ளது’ என்றார்.

Related Stories: