பாலக்காடு அருகே மாவோயிஸ்ட் மணிவாசகத்தை போலீசார் பிடித்து சுட்டுக்கொன்றனர்: இந்திய கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: பாலக்காடு  அருகே மாவோயிஸ்ட் மணிவாசகத்தை போலீசார் பிடித்த பின்னர்தான்  சுட்டுக்கொன்றனர் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது . கேரளாவில் பாலக்காடு அருகே அட்டப்பாடியில் உள்ள  மஞ்சன்கண்டி வனப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தை  சேர்ந்த மணிவாசகம் உட்பட 4 மாவோயிஸ்ட்களை கேரள அதிரடி போலீசார் சுட்டு  கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. மாவோயிஸ்ட்கள் சுட்டதால்தான் தாங்கள்  திருப்பி சுட்டதாகவும், அதில் 4 பேரும் இறந்ததாகவும் போலீசார் கூறினர்.  ஆனால் சரணடைய வந்தவர்களை போலீசார் சுட்டு கொன்றதாக இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி குற்றம் சாட்டியது.இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் உதவி  செயலாளர் பிரகாஷ் பாபு தலைமையில் கட்சி தலைவர்கள் கடந்த இரு தினங்களுக்கு  முன்பு துப்பாக்கிச்சூடு நடந்த வனப்பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினர்.  

அதன்பின் பிரகாஷ் பாபு கூறியதாவது: மணிவாசகம் உட்பட 4 மாவோயிஸ்ட்கள் மீது  போலீசார் நடத்தியது போலி என்கவுன்டர் தாக்குதலாகும். மாவோயிஸ்ட்கள்  போலீசாரை சுடவில்லை. 5 அல்லது 6 பேர் அடங்கிய மாவோயிஸ்ட்குழுவினரை  போலீசார் முற்றுகையிட்டு துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர்.இதில்  தப்பிய மணிவாசகத்தை போலீசார் விரட்டி சென்று பிடித்துள்ளனர். அதன்பிறகு  அவரை சுட்டு கொன்றனர். வனப்பகுதியில் வசிக்கும்  ஆதிவாசிகளுக்கு போலீஸ் அதிரடி படையினரால்தான் ஆபத்து உள்ளதே தவிர,  மாவோயிஸ்ட்களால் இல்லை. துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் நாங்கள்  செய்த ஆய்வில் இருந்து பல உண்மைகளை கண்டு பிடித்துள்ளோம். இந்த ஆய்வு  அறிக்கையை நாளை கேரள முதல்வரிடம் நாங்கள் தாக்கல் செய்வோம். இவ்வாறு அவர்  கூறினார்.

Related Stories: