மின்சார ரயில்களில் பயணிகளிடம் நகை, பணம் திருடிய பெண் சிக்கினார்

சென்னை: தாம்பரம் - சென்னை கடற்கரை வழித்தட மின்சார ரயில்களில் பயணிகளின் நகை, பணத்தை திருடி வந்த பிராட்வே கந்தசாமி கோயில் தெருவை சேர்ந்த பிரியங்கா (21) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ25 ஆயிரம், ஒரு சவரன் வளையல், நான்கு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

* ஓட்டேரி பாஷ்யம் 2வது தெருவை சேர்ந்த ஸ்ரீனிவாசன் (40) என்பவர், தீபாவளி சீட்டு மற்றும் மாத சீட்டு நடத்தியதில் நஷ்டம் ஏற்பட்டதால் தனது சொத்துகளை விற்று சீட்டு கட்டியவர்களுக்கு பணம் கொடுத்துள்ளார். இந்நிலையில், தனது சொத்துக்கள் பறிபோனதால் மனமுடைந்த ஸ்ரீனிவாசன் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

* பொழிச்சலூர் நேரு நகரை சேர்ந்த சரவணன் (34), கடன் தொல்லையால் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

* கோடம்பாக்கத்தை சேர்ந்த முருகேசன் (18), நேற்று முன்தினம் ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை மேம்பாலத்தில் பைக்கில் சென்றபோது, திடீரென பைக்கில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலே இறந்தார்.

* காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரை சேர்ந்த லோகேஷ், தி.நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்காக, நேர்முக தேர்வில் பங்கேற்க வந்தபோது, பைக்கில் வந்த மர்ம நபர், அவரது செல்போனை பறித்துக் கொண்டு தப்பினார்.

* தேனாம்பேட்டை கணேசபுரம் 5வது தெருவை சேர்ந்த பைக் கம்பெனி மேலாளர் ரோமியோ கிறிஸ்டி (52), நேற்று முன்தினம் இரவு தனது நண்பர் ரமேஷ் என்பவருடன் பைக்கில் துரைப்பாக்கம் தனியார் கல்லூரி அருகே சென்றபோது, பின்னால் வந்த மாநகர பஸ் இவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் கிறிஸ்டி இறந்தார். அவரது நண்பர் ரமேஷ் லேசான காயத்துடன் தப்பினார்.

* சாலிகிராமத்தை சேர்ந்த குகன் (30), ஜமீன் பல்லாவரம் நடேசன் சாலையை சேர்ந்த விஸ்வநாதன் (34) ஆகியோர், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தங்களது வீட்டு மனையை பார்வையிட நேற்று பைக்கில் சென்றனர். சோமங்கலம் அருகே சென்றபோது, லாரி மீது மோதியதில் குகன் இறந்தார். படுகாயமடைந்த விஸ்வநாதனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சாலையில் கிடந்த ரூ3 லட்சம் போலீசாரிடம் ஒப்படைப்பு

மேற்கு தாம்பரம் காமராஜர் தெருவை சேர்ந்த மதன்ராஜ் ஜெயின் (58), அதே பகுதியில் இருசக்கர வாகன உதிரி பாகம் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர், தனது கடையின் அருகே உள்ள சாலையில் நடந்து சென்றபோது, ஒரு பை கேட்பாரற்று கிடந்துள்ளது. அதனை எடுத்து திறந்து பார்த்தபோது, அதில் ₹3 லட்சம் இருந்துள்ளது. அதை தாம்பரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: