ஆட்சியை பற்றி குறை தெரிவிக்க எதிர்கட்சி தலைவருக்கு உரிமை உள்ளது: காங்கிரஸ் மூத்த தலைவர் பேட்டி

சென்னை:  ஆட்சியை பற்றிய குறைகளை தெரிவிக்க எதிர்கட்சி தலைவருக்கு முழு உரிமை உண்டு என காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.  இந்திரா காந்தியின் 35வது நினைவு நாள் நிகழ்ச்சி துறைமுகம் தொகுதி ராஜாஜி சாலையில் உள்ள மக்கள் விழிப்புணர்வு மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் இரா.மனோகர் தலைமை வகித்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் இந்திரா காந்தியின் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

 நிகழ்ச்சியின் போது, பீட்டர் அல்போன்ஸ் நிருபர்களிடம் கூறியதாவது:  ஜனநாயக நாட்டில் ஆளுகின்ற கட்சி எப்படி ஆட்சி செய்வதற்கு உரிமை உண்டோ அதுபோன்று அந்த ஆட்சியை விமர்சனம் செய்வதற்கும் எதிர்கட்சி தலைவருக்கு முழு உரிமை உண்டு. முதல்வருக்கு இருக்கிற உரிமையை விட எதிர்கட்சி தலைவருக்கு இருக்கிற உரிமை எந்த வகையிலும் குறைந்தது அல்ல. எனவே எதிர் கட்சி தலைவர் கூறும் குறைபாடுகளை உள்வாங்கி கொண்டு அதை சரி செய்ய முயற்சிக்க வேண்டுமே தவிர குற்றச்சாட்டுக்கு உள்நோக்கம் கற்பிப்பது என்பது ஆரோக்கியமான ஜனநாயகமாக இருக்காது.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: