தீபாவளி அன்று டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுவிற்ற 180 பேர் மீது நடவடிக்கை

சென்னை: தீபாவளியன்று டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுவிற்ற 180 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுவிற்பனை செய்யப்படுவது குறித்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான புகார்கள் தலைமை அலுவலகத்திற்கு வந்தவாறு உள்ளன. வழக்கமான நாட்களை விட தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற விடுமுறை நாட்களில் பாட்டிலுக்கு ₹30 முதல் ₹50 வரையில் கூடுதல் விலைக்கு மதுவிற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. எனவே, இதை தடுக்க பாட்டிலுக்கு ₹1 கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தால் ₹10 ஆயிரம் வரையில் அபராதம் விதிக்கப்படும் என கடை பணியாளர்களுக்கு நிர்வாகம் எச்சரித்து இருந்தது. ஆனால், இதை எல்லாம் மீறி கூடுதல் விலை வைத்து விற்பனை என்பது தொடர்கிறது.

இந்நிலையில், தீபாவளிக்கு கடைகளில் கூடுதல் விலை வைத்து மதுவிற்பனை செய்யும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. மேலும், கடைகளில் ஆய்வு செய்ய முதுநிலை மண்டல மேலாளர்கள், பறக்கும் படை அதிகாரிகள், மாவட்ட மேலாளர்கள் அடங்கிய சிறப்பு குழுவையும் நிர்வாகம் அமைத்தது. இவர்கள் தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே அனைத்து கடைகளிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.  இந்த தீவிர ஆய்வின்போது தமிழகம் முழுவதும் உத்தரவை மீறி கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்த 180 பேர் பிடிபட்டுள்ளனர். சென்னையில் மட்டுமே 67 பேர் பிடிபட்டனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து டாஸ்மாக் தலைமை அலுவலகத்துக்கு அதிகாரிகள் அறிக்கை அனுப்பியுள்ளனர். இதேபோல், கடந்த 6 மாதத்தில் தமிழகம் முழுவதும் கூடுதல் விலைக்கு மதுவிற்பனை செய்த 620 பேர் பிடிபட்டுள்ளனர்.

Related Stories: