அந்தமான் அருகே நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: அந்தமான் அருகே நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறவும் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவும் பட்சத்தில் தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, கடலோர மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. மேலும் வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது, அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

வெப்பச்சலணம் காரணமாக தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம், சேலம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகா புயல் தென்மேற்கு அரபிக்கடலில் நிலை கொண்டுள்ளதால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக அரபிக்கடல் பகுதிக்கு அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: