தமிழகம் முழுவதும் பயனற்று கிடந்த 126 ஆழ்துளை கிணறுகள் மூடல்: குடிநீர் வடிகால் வாரியம் அதிரடி

சென்னை:  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் 556 கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 1,906 மில்லியன் லிட்டர் குடிநீர் தினமும் விநியோகித்து வருகிறது. இத்திட்டங்களில் 114 திட்டங்கள் ஆழ்துளை கிணறுகள், 18 திட்டங்கள் திறந்தவெளி கிணறுகள், 280 திட்டங்கள் நீர் உறிஞ்சு கிணறுகள், 25 திட்டங்கள் நீர் சேகரிக்கும் கிணறுகள், 74 திட்டங்கள் ஆற்றுப்படுகை மேற்பரப்பு நீர் சேகரிப்பு, 16 திட்டங்கள் கடல்நீரைக் குடிநீராக்குதல், 29 திட்டங்கள் குடிநீர் எடுப்பு முனை திட்டங்கள் ஆக மொத்தம் 556 திட்டங்கள் மூலமாக பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கபட்டு வருகிறது. ஆழ்துளை கிணறுகளை மூடுவது குறித்தும், அவற்றை மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்றுவது குறித்தும் பொதுமக்கள் புரிந்து கொள்ளும் வகையில் இணையதளம், பேஸ்புக், டிவிட்டர் ஆகியவற்றை குடிநீர் வடிகால் வாரியம் உருவாக்கியுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் உரிய வழிகாட்டுதல்களையும், ஆலோசனைகளையும் பெற்று வருகின்றனர்.

 தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் வடிகால் வாரியம் மூலம் போடப்பட்ட ஆழ்துளை கிணறுகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 959 ஆழ்துளை கிணறுகள் கண்டறியப்பட்டு, அதில் 833 ஆழ்துளை கிணறுகள் பயன்பாட்டில் உள்ளன. 126 ஆழ்துளை கிணறுகள் பயன்படாத நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது. அந்த ஆழ்துளை கிணறுகளில் ஆடு, மாடு, குழந்தைகள் ஆகியவை விழுந்து விபத்து ஏற்படாத வகையில் அவை பாதுகாப்பான நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

 குடிநீர் வடிகால் வாரிய உத்தரவு காரணமாக அனைத்து அலுவலர்களும் போர்க்கால அடிப்படையில் இப்பணியை செய்து முடித்துள்ளனர். இதுபோன்று மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் இருந்தால் தனியார் மற்றும் பொதுமக்களுக்கு எந்த நேரத்திலும் எல்லாவித தொழில்நுட்ப ஆலோசனைகளை குடிநீர் வடிகால் வாரியம் வழங்க தயாராக உள்ளது.   இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: