அந்தமான் கடல்பகுதியில் புதிய காற்றழுத்தம் 2 நாட்களுக்கு மிதமான மழை

சென்னை: அந்தமான் கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்புள்ளதால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல  வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சில நாட்களுக்கு முன் குமரிகடல் பகுதியில் உருவான காற்றழுத் தாழ்வு நிலை மகா புயலாக மாறியது.  இந்த புயலால் தமிழகத்தில் பல இடங்களில் மிக கனமழை பதிவானது. மகா புயல் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இது தற்போது குஜராத் கடற்கரைக்கு 610 கி.மீ தெற்கிலும், கோவாவிலிருந்து 410 கி.மீ  மேற்கிலும் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் கிழக்கு மத்திய அரபி கடலை அடைய வாய்ப்புள்ளது.   நேற்று காலை 8.30 மணியுடன்  முடிந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் வால்பாறையில் 22.2 மி.மீ, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 17 மி,மீ, திருச்சியில் 11.9 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது தவிர   பல இடங்களில்  10 மி.மீட்டருக்கு குறைவாக மழை பெய்துள்ளது.    

இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்துக்கான வானிலை முன்னறிவிப்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன்  கூறியதாவது: அந்தமான் கடல்பகுதியில் நவம்பர் 3ம் தேதி காற்றழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதன்மூலம் தமிழகத்திற்கு மழை கிடைக்க வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு  கனமழை எச்சரிக்கை இல்லை. ஆனால் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, புறநகர் பகுதிகள் திருவள்ளூர், காஞ்சிபுரம் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.  சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 92 டிகிரி வரை பதிவாக வாய்ப்புள்ளது. இவ்வாறு சென்ைன மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறினார்.

Related Stories: