கீழடி அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்த 12.21 கோடியில் புதிய அருங்காட்சியகம்: தமிழ்நாடு நாள் விழாவில் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

சென்னை: கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை  காட்சிப்படுத்த சிவகங்கை மாவட்டத்தில் ரூ.12.21 கோடியில் புதிய உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு  நாள் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழக அரசு சார்பில் “தமிழ்நாடு நாள் விழா” கலைவாணர் அரங்கத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது: தமிழ்நாட்டின் கலை மற்றும் பண்பாட்டிற்குச் சான்றாக விளங்கும் மாமல்லபுரத்தில், சீன நாட்டு அதிபர் மற்றும் இந்திய பிரதமரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்தச் சமயத்தில், மாமல்லபுரத்தில்  உள்ள தமிழர் மரபை பறைசாற்றும் சிற்பங்களை பிரதமரே சீன அதிபருக்கு விளக்கினார். தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்பட்ட தமிழர் மரபுசார்ந்த வரவேற்பும், விருந்தோம்பலும் மற்றும் உபசரிப்பும் கண்டு  வியந்து நாடு திரும்பிய  சீன அதிபர் இதனை வெகுவாக பாராட்டி, நன்றி தெரிவித்து தமிழர்களின் பண்பாட்டையும், சிறப்பையும் உலகிற்கு உணர்த்தினார்.

தமிழ்நாட்டை காண்பதற்காக, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது.  கடந்த 4 ஆண்டுகளாக, 2014 முதல் 2017  வரையிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. தமிழ்நாடு நாள் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது, தமிழ் நாட்டின் பெருமை பற்றியும், நமது மொழியின் தொன்மை பற்றியும், அனைவரும் நினைவுகூறும் வகையில் அமையும். தமிழ் எங்கள் மூச்சு, தமிழ்  எங்கள் பேச்சு, தமிழ் எங்கள் செயல்பாடு, தமிழ் எங்கள் உணர்வில் பூந்தென்றல் என்று தமிழ் வளர்ச்சித் திட்டங்களை தொடர்ச்சியாக இந்த அரசு தொடர்ச்சியாக தமிழ்ப் பணி ஆற்றி வருகிறது.

 “இந்த இனிய நாளில், கீழடி  அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை காட்சிப்படுத்திட சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், கொந்தகை கிராமத்தில் ஒரு புதிய உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் ரூபாய் 12.21  கோடி செலவில் அமைக்கப்படும்.   இதன் மூலம் தமிழர்களின் பண்டைய பண்பாடு மற்றும் தொன்மை குறித்து மக்கள் அறிந்து கொண்டு பெருமை கொள்ள அரசு வழிவகை செய்யும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள்,  எம்பி, எம்எல்ஏக்கள், தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் உயர் அதிகாரிகள்  கலந்து கொண்டனர்.

Related Stories: