கல் குவாரி லாரிகளால் நாசமான மூவரசன்பட்டு பிரதான சாலை : வாகன ஓட்டிகள் அவதி

ஆலந்தூர்: கல் குவாரி லாரிகளால் மூவரசன்பட்டு  பிரதான சாலை குண்டும் குழியுமாக மாறி, தற்போது சகதியாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். மூவரசன்பட்டு பிரதானை சாலை முக்கிய போக்குவரத்து தடமாக உள்ளது. திரிசூலம் கல்குவாரியில் இருந்து வரும் டிப்பர் லாரிகள்  அதிகளவில் அந்த வழியாக செல்வதால் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது சாலை பள்ளங்களில் மழைநீர் தேங்கி சகதியாக மாறியுள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், சாலையில் உள்ள ராட்சத பள்ளங்களில் லாரிகள் ஏறி இறங்கும்போது லாரி சாய்ந்து விடுமோ என்ற பயத்தில் வாகன ஓட்டிகள் செல்கின்றனர். தொடர்ந்து பெய்த மழையினால் இந்த சாலை தற்போது சேறும் சகதியுமாகி மோசமாக காணப்படுகிறது.

இதனால், இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள்  பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக  சைக்கிள்  மற்றும் பைக்கில்  செல்வோர் இந்த சேற்றில் சறுக்கி விழுந்து விடுகின்றனர். மேலும், நடந்து  செல்பவர்களின்  நிலைமையோ மிகவும் பரிதாபமாக உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘தினந்தோறும் 200க்கும் மேற்பட்ட  டிப்பர் லாரிகள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லும் முக்கிய சாலையாக இது உள்ளது. பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள, இந்த சாலையை அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை. இந்த சாலை பழுதடைந்து பல ஆண்டுகள் ஆகிறது. இங்கு அடிக்கடி செல்லும் டிப்பர் லாரிகள் சாலை குழிகளில் உள்ள சேற்றை  வீட்டின் மீது வாரி இறைத்து  விட்டு செல்கிறது. இதனால், வீடு மற்றும் மதில்சுவர் பாழ்படுகிறது. 

Related Stories: