குமரியில் கொட்டி தீர்த்த கன மழையால் 2500 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின

நாகர்கோவில்: மகா புயல் காரணமாக குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கன மழை காரணமாக, சுமார் 2500 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. வீடுகளை சூழ்ந்த வெள்ளம் மெல்ல, மெல்ல வடிய தொடங்கியது. லட்சத்தீவில் உருவான மகா புயல் காரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. குமரி மாவட்டத்தில் கடந்த இரு நாட்காளக பெய்த கன மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று முன் தினம் தொடர்ச்சியாக பெய்த கன மழையால் பல இடங்களை வெள்ளம் சூழ்ந்தது. அணைகளுக்கான நீர் வரத்தும் அதிகரித்தது.  தாமிபரணி, பழையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆற்றின் கரைகளையொட்டி உள்ள பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கின.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத்துறையாறு  அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக, சுமார் 4 ஆயிரம் கன அடி தண்ணீர்  உபரியாக திறக்கப்பட்டது. இதனால் பரளியாறு,  குழித்துறை ஆற்றில் வெள்ளம் அதிகரித்தது. பரளியாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால், மாத்தூர் தொட்டி பாலம் அடிப்பகுதியில் உள்ள சப்பாத்து பாலம் தண்ணீரில் மூழ்கியது. கோதையாற்றில் வெள்ளம் காரணமாக திற்பரப்பு  அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் தொடர்ந்து அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பூதப்பாண்டி  சுற்றுவட்டார பகுதிகளில் மழை வெள்ளத்தால் சாலைகள் துண்டிக்கப்பட்டன. ஈசாந்திமங்கலம், அருமநல்லூர், தெரிசனங்கோப்பு உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. சுசீந்திரம், கற்காடு மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளிலும் பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் கலக்கம்  அடைந்துள்ளனர். 1000 ஏக்கருக்கு மேல் கும்ப பூவுக்கான நடவு பணிகளும், 1500 ஏக்கர் வரை கன்னிப்பூவுக்கான அறுவடையும் நடக்க இருந்த நிலையில் சுமார் 2500 ஏக்கர் நீரில் மூழ்கி உள்ளதாக, விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை மாவட்டத்தின் பல இடங்களில் வெயில் அடிக்க தொடங்கியதால், வெள்ளம் மெல்ல, மெல்ல வடிய தொடங்கி உள்ளது. தாமிபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கணபதியான்கடவு அருகே பள்ளிக்கல் பகுதியில் 25 குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். முன்சிறை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தால் அந்த பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பழையாற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தேரூர் பேரூராட்சிக்குட்பட்ட சங்கர் நகர், மீனாட்சிநகர், உதிரப்பட்டி, பாலகிருஷ்ணன்புதூர், இந்திராகாலனி, சுசீந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட குத்துக்கல், ஆசாத் நகர், நங்கை நகர், கற்காடு, பரப்புவிளை, கவிமணி நகர், தாணுமாலயன் நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. பழையாற்றில் தண்ணீர் வேகமாக செல்லாததால் ஜேசிபி இயந்திரம் வைத்து பழையாற்றின் கரைகளை தூர்வாரினர். சுசீந்திரம் செங்கட்டிப்பாலம் வரை பணிகள் நடைபெற்றது. தற்போது நேற்று இரவு முதல் வெள்ளம் மெல்ல, மெல்ல வடிய தொடங்கியதையடுத்து வீடுகளில் இருந்து வெளியேறியவர்கள், இன்று காலை முதல் மீண்டும் வீடுகளுக்கு திரும்பினர். வீடுகளை சூழ்ந்து இருந்த தண்ணீரை அவர்கள் அப்புறப்படுத்தினர்.

இன்று காலை 8 மணி நிலவரப்படி, மாவட்டத்தின் முக்கிய அணையான பேச்சிப்பாறை அணை நீர் மட்டம் 38.65 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,167 கன அடி தண்ணீர் வருகிறது. அணை மூடப்பட்டது. பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 72.10 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1250 கன அடி தண்ணீர்  வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. சிற்றார் 1, 16.10 அடியாகவும், சிற்றார் 2, 16.20 அடியாகவும் உள்ளன. பொய்கை 30.40 அடியாகவும், மாம்பழத்துறையாறு 54.12 அடியாகவும், முக்கடல் அணை 25 அடியாகவும் உள்ளன. தொடர்ந்து மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளதால், கரையோர கிராம மக்கள் உஷார் நிலையில் இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

Related Stories: