சோலார் பேனல் மோசடி வழக்கில் கேரள நடிகை சரிதா நாயர் உட்பட 3 பேர் குற்றவாளிகள் என கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை: சோலார் பேனல் மோசடி வழக்கில் கேரள நடிகை சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன், ரவி ஆகியோர் குற்றவாளி என கோவை 6 வது குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கேரளாவை சேர்ந்த நடிகை சரிதா நாயர் கோவை வடபழனி பகுதியில் சர்வதேச ஆலோசனை மற்றும் மேலாண்மை சேவை மையம் என்ற பெயரில் ஒரு அலுவலகத்தை நடத்தி வந்தனர். அதில், சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக கோவையில் 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் 2009ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருந்த போது, அவரது கணவர் சிபி ராதாகிருஷ்ணன் ஒரு சில வாய்தாகளுக்கு மட்டும் ஆஜராகியிருந்தார்.

பல்வேறு வாய்தகளுக்கு ஆஜராகாமல் இருந்ததன் காரணமாக அந்த வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்த நிலையில், வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கேரள நடிகை சரிதா நாயர், அவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையின் இறுதியில் நடிகை சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன், ரவி ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இன்று மாலை 3.30 மணி அளவில் தண்டனை குறித்து தெரிவிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்த சோலார் பேனல் வழக்கு சம்பந்தமாக இவர்கள் மீது கேரளாவிலும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.

கேரளாவில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சோலார் பேனல் முறைகேடு விவகாரம் அம்மாநிலத்தை உலுக்கியது. இது தொடர்பாக நடிகை சரிதா நாயர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, சரிதாநாயர் பல மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜெயிலில் இருந்து வெளியே வந்த அவர், காங்கிரஸ் அரசில் அமைச்சர்களாக இருந்த பலரும் பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டினார். மேலும் அப்போதைய முதல்வர் உம்மன்சாண்டி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹிபி ஈடன் ஆகியோர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறினார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அம்மாநிலத்தில் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: