புதுவண்ணாரப்பேட்டையில் பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் கைது: இருவருக்கு வலை

தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் பைக், கார், ஆட்டோக்களில் பெட்ரோல் திருடியபோது பிடிபடாமல் பெட்ரோல் குண்டு வீசிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். வடசென்னை பகுதிகளான புதுவண்ணாரப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, ராயபுரம், காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே இரவு நேரங்களில் வாசலில் நின்றிருக்கும் பைக், கார், ஆட்டோ போன்ற வாகனங்களில் இருந்து மர்ம நபர்கள் பெட்ரோல் திருடி வந்தனர். இந்நிலையில் தீபாவளிக்கு முதல் நாள் இரவு புதுவண்ணாரப்பேட்டை ஏ.இ.கோயில் தெரு, மேற்கு மாடவீதி பகுதியில் 4 பேர் கும்பல் வீடுகளின் முன் நின்றிருந்த வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடிக் கொண்டிருந்தனர். அவர்களை அப்பகுதி மக்கள் சுற்றிவளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

இதில் ஆத்திரமடைந்த அக்கும்பல் மக்களை மிரட்டுவதற்காகவும் மற்றவர்கள் தங்களை பிடிக்காமல் இருப்பதற்காகவும் பாட்டில்களில் திரியை பற்றவைத்து, சரமாரியாக பெட்ரோல் குண்டுகளை வீசினர். மேலும் அங்கிருந்த கார், பைக், ஆட்டோக்களை சரமாரியாக அடித்து நொறுக்கினர். அவர்களை பொதுமக்கள் பிடிக்க முயற்சித்தபோது தப்பி ஓடிவிட்டது. இப்புகாரின்பேரில் புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இந்த மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து தண்டையார்பேட்டை, வஉசி நகர், மாதா கோயில் தெருவை சேர்ந்த கணபதி (எ) டோரை (25), காரனேசன் நகரை சேர்ந்த சூரியகுமார் (24) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அப்பு, கணேஷ் ஆகிய இருவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: