கிராமம், தெருவாரியாக ஆழ்துளை கிணறுகளை கணக்கெடுக்க வேண்டும்: குடிநீர் வாரிய எம்டி உத்தரவு

சென்னை: பயனற்று கிடக்கும் ஆழ்துளை கிணறுகளை கிராமம், தெருவாரியாக கணக்கெடுக்க வேண்டும் என்று குடிநீர் வாரிய மேலாண் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். திருச்சி நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த  சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி, பயனற்ற ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து அவற்றை மூட நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முதல்கட்டமாக   தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு சொந்தமான ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்றும் நடவடிக்கை தொடங்கி உள்ளது. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கிராமம், தெருவாரியாக சென்று தீவிரமாக  ஆழ்துளை கிணறுகளை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் ஹரிஹரன் நேற்று செயற்பொறியாளர்கள், பகுதி திட்ட பொறியாளர்கள் ஆகியோருக்கு அவசர சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், ‘‘சென்னை குடிநீர் வாரியம் சார்பில்  அமைக்கப்பட்டு பயனற்று கிடக்கும் ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து அவற்றை மழைநீர் கட்டமைப்புகளாக மாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் வாரியம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள்  மட்டுமல்லாது, தனியார் நிறுவனங்கள், வீடுகள், கட்டிடங்களில் போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் செயல்படாமல் இருப்பின் அவற்றையும் கண்டறிந்து மழைநீர் கட்டமைப்புகளாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று  கூறப்பட்டுள்ளது.

Related Stories: