கூடங்குளம் அணு மின் நிலையம் மீது இணையவழி தாக்குதல் நடந்தது உண்மைதான் : அணுசக்தி வாரியம் ஒப்புதல்

நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலைய கம்ப்யூட்டர்களை ஊடுருவ ஹேக்கர்கள் முயன்றது உண்மைதான் என இந்திய அணுசக்தி வாரியம் பதில் தெரிவித்துள்ளது. நெல்லை  மாவட்டம், கூடங்குளத்தில்  இந்தியா - ரஷ்யா கூட்டு முயற்சியுடன் தலா 1000 மெகாவாட் உற்பத்தி திறன்  கொண்ட 2 அணு உலைகள்  அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடந்து வருகிறது. மேலும்  3, 4, 5, 6 என கூடுதலாக 4 அணு  உலைகளும், அணு கழிவு  சேமிப்பு வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. இதனால், 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய  மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில்  கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான  ரகசிய தகவல்களை இணையதளம் வழியாக வடகொரிய ஹேக்கர்கள்  ஊடுருவி திருடி விட்டதாகவும், தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள் திருடு போனதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. இதற்கு அணுமின் நிலைய பயிற்சி கண்காணிப்பாளர் மற்றும் தகவல் அலுவலர்  ராம்தாஸ் நேற்று முன்தினம் மறுப்பு தெரிவித்தார். ஆனால், இந்திய அணுசக்தி கழக கூடுதல் இயக்குநர் ஏ.கே.நீமா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்திய அணுசக்தி கழக இணையதள தொடர்பில் தாக்குதல் நடந்தது உண்மை தான். சைபர் தாக்குதல் நடந்தது தொடர்பாக கணினி அவசர கால செயல்பாட்டு குழு (Computer Emergency Response Team - CERT) கடந்த செப்.4ம் தேதி கண்டறிந்தது. இந்தத் தகவல் குறித்து இந்திய அணுசக்தி துறையின் நிபுணர் குழு உடனடியாக ஆய்வு நடத்தியது. அப்போது அணுமின் நிலைய  நிர்வாக பிரிவு பயன்படுத்தி வந்த ஒரு கணினியில் தாக்குதல் நடந்தது தெரியவந்தது.

உடனடியாக அந்த கணினி இந்திய அணுசக்தி கழகத்தின் இணைப்புகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டது. இந்த சைபர் தாக்குதல் காரணமாக இந்திய அணுசக்தி கழகத்தின் செயல்பாட்டில் உள்ள கணினிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார். கூடங்குளத்தில் சைபர் தாக்குதல் இல்லை எனவும், தாக்குதல் நடந்தது உண்மைதான் எனவும் இரண்டு தரப்பினர் அளித்த மாறுபட்ட தகவல்கள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: