கடையநல்லூர் ரயில் நிலையத்தை சிறப்பு ரயில்கள் புறக்கணிப்பு: தெற்கு ரயில்வே கண்டுகொள்ளுமா?

நெல்லை: தெற்கு ரயில்வே இயக்கும் சிறப்பு ரயில்கள் கடையநல்லூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லாததால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தென்காசிக்கும், ராஜபாளையத்திற்கும் சென்று ரயில் ஏற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

தென்காசி- மதுரை வழித்தடத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக கடையநல்லூர் ரயில் நிலையம் திகழ்கிறது. தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் கடையநல்லூர் ரயில் நிலையத்தில் இருந்து தென்காசி, செங்கோட்டைக்கும்,  மறுமார்க்கமாக மதுரைக்கும் பயணிக்கின்றனர். இந்த ரயில் நிலையத்தில் தினசரி சென்னைக்கு இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ், கொல்லம் எக்ஸ்பிரஸ், வாரம் 3 முறை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் நின்று  செல்கின்றன. தினமும் 3 முறை இயக்கப்படும்

மதுரை- செங்கோட்டை பயணிகள்  ரயில்களும் நின்று செல்கின்றன.

ஆனால் சிறப்பு ரயில்கள் கடையநல்லூர் ரயில் நிலையத்தை பெரும்பாலும் புறக்கணிப்பது வழக்கமாக உள்ளது. எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் மற்றும் நெல்ைல - தாம்பரம் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ்  ரயில்கள், நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ரயில்களுக்கும் கடையநல்லூர் ரயில் நிலையத்தில் நிறுத்தம் கிடையாது. இதனால் ரயில் பயணிகள் கடும் திண்டாட்டத்தில் உள்ளனர்.நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூர், சங்கரன்கோவில் ரயில் நிலையத்தை தவிர, மற்ற  ரயில் நிலையங்களில் இந்த ரயில்கள் நின்று செல்கின்றன. கடையநல்லூர் ரயில் நிலையத்தில் ரயில் ஏறும் பயணிகளுக்கு ெபரும்பாலும் தினசரி  ரயில்களில் இடம் கிடைப்பதில்லை. எனவே அவர்கள் சிறப்பு ரயில்களில் ஏறி செல்ல அதிகம் விரும்புகின்றனர். இருப்பினும் இந்த ரயில்கள் நிற்காமல் செல்வதால் தினசரி ரயில்களை நாடி செல்ல வேண்டியதுள்ளது.

இதுகுறித்து கடையநல்லூர் சுற்றுவட்டார ரயில் பயணிகள் கூறுகையில், ‘‘கடையநல்லூர் ரயில் நிலையத்தை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சிறப்பு ரயில் ஏற நாங்கள்  தென்காசிக்கு செல்ல வேண்டியதுள்ளது. தெற்கு ரயில்வேக்கு கடையநல்லூர் ரயில் நிலையத்தில் மாதம்தோறும்  போதுமான வருவாய் கிடைக்கிறது. செங்கோட்டையில் இருந்து இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் எங்களுக்கு முன்பதிவு கோட்டா  குறைவு. பலர் முன்பதிவு இடம் கிடைக்காமல் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிக்க வேண்டியதுள்ளது.  வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் நாங்களும் கோரிக்கை வைத்து போராடினோம்.

ஆனால் ரயிலுக்கு கடையநல்லூரில் நிறுத்தம் வழங்கப்படவில்லை. சிறப்பு ரயில்கள் தென்காசி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டால்,  விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில் நிலையத்தில்தான் நிற்கிறது. தெற்கு ரயில்வே அளிக்கும் நிறுத்தங்கள் வினோதமாகவே இருக்கிறது. நெல்லை- தாம்பரம் சிறப்பு ரயிலுக்கு கல்லிடைக்குறிச்சியில் நிறுத்தம் அளிக்கப்பட்டது. ஆனால்  கீழ கடையத்தில் நிறுத்தம் வழங்கப்படவில்லை. பின்னர் நெல்லை தொகுதி எம்.பி. தலையீட்டு கடையத்திற்கு நிறுத்தம் வாங்கி கொடுத்தார்.

அதேபோல் தென்காசி தொகுதியிலும் கடையநல்லூருக்கும், சங்கரன்கோவிலுக்கும் நிறுத்தம் இல்லை. ஆனால் பாம்புகோயில் சந்தைக்கு சிறப்பு ரயிலுக்கு நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. பயணிகள் எங்கு கூடுதலாக வருகின்றனர் என்பதை  கண்காணித்து நிறுத்தங்கள் வழங்கப்பட வேண்டும். கடையநல்லூர் ரயில் நிலையத்தில் சிறப்பு ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறோம். இல்லையெனில் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து சுற்றுவட்டார மக்களை  திரட்டி போராட்டம் நடத்த உள்ளோம்.’’ என்றார்.

Related Stories: