ஆழியார் பகுதியில் தொடர் மழை: குரங்கு அருவியில் வெள்ளம்...சுற்றுலா பயணிகளுக்கு தடை

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் பகுதியில் பெய்த கன மழையால், குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அருகே உள்ள குரங்கு அருவியில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. இதில் நேற்றும் வழக்கம்போல் காலை நேரத்தில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் குளித்து கொண்டிருந்தனர்.

இதற்கிடையே ஆழியார் பகுதியில் பெய்த கன மழையால், திடீரென குரங்கு அருவியில் தண்ணீரின் அளவு அதிகரித்தது. இதையறிந்த வனத்துறையினர் உடனடியாக சுற்றுலா பயணிகளை அங்கிருந்து வெளியேற்றினர். பின்னர் நேரம் செல்ல செல்ல குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து அருவிக்கு விதிமீறி யாரேனும் செல்கிறார்களா? என வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இன்று காலையும் அருவியில் தண்ணீரின் அளவு அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அருவியில் வரும் நீரின் அளவு குறைந்தால் மட்டுமே சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: