காப்பகத்தில் இருந்த 10 சிறுவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழுவுக்கு அசாம் டிஜிபி பாராட்டு

சென்னை: குழந்தைகள் காப்பகத்தில் வசித்து வந்த 10 அசாம் சிறுவர்களை சென்னை மாவட்ட சட்டபணிகள் ஆணை குழு மீட்டு, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தது. இதற்காக அம்மாநில டிஜிபி பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகங்கள் சரியாக இயங்குகிறதா. அரசின் விதிகளின்படி அனைத்தும் முறையாக பின்பற்றப்படுகிறதா. மேலும் சிசிடிவி, உணவு, உடை, குழந்தைகளின் விவரங்கள் சரியாக உள்ளதா என்பது குறித்து, ஒவ்வொரு மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவும் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், சென்னை மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழு செயலாளர் நீதிபதி ஜெயந்தி, சென்னையில் உள்ள 100க்கும் மேற்பட்ட காப்பகங்களில் சோதனை நடத்தி வருகின்றார். அப்போது காப்பகங்களில் இருக்கும் குறைகளை கண்டறிந்து, அறிக்கையாக தயார் செய்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராயபுரம் பகுதியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கு அசாம் மாநிலத்தை சேர்ந்த 10 சிறுவர்கள் தங்கியிருப்பது தெரியவந்தது. அவர்களிடம் விசாரணை நடத்தியதில், ஒரு சிலர் வீட்டை விட்டு பயந்து ஓடி வந்ததாகவும். ஒரு சிலர் கொத்தடிமைகளாக அழைத்து வரப்பட்டு வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனை அறிந்த நீதிபதி, அவர்களிடம் விவரங்களை சேகரித்து, அசாம் மாநில காவல் துறை டிஜிபி பிஷ்னோய் என்பவரை தொடர்பு கொண்டு சிறுவர்களின் விவரங்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பி வைத்தார்.

அதனை பார்த்த அதிகாரி, சிறுவர்களின் விவரங்களை வைத்து அவர்களது பெற்றோர்களை கண்டுபிடித்தனர். இதனையடுத்து அனைத்து சிறுவர்களையும் பெற்றோரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நீதிபதி சிறுவர்களுக்கு ரயில் டிக்கெட் பதிவு செய்து, நேற்று சென்னை எழும்பூரில் இருந்து 10 மாணவர்களையும் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். இதற்கு அசாம் மாநில காவல் துறை டிஜிபி இந்த செயலில் ஈடுபட்ட சென்னை மாவட்ட சட்டபணிகள் ஆணை குழுவிற்கு மிகுந்த பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

Related Stories: