அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் சகதி சாலைகளால் தொழிலாளர்கள் அவதி: புதைகுழியில் சிக்கும் வாகனங்கள்

அம்பத்தூர்: அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டை, மண்ணூர்பேட்டை ஆகிய பகுதியில் சேறும் சகதியுமான சாலைகளால் தொழிலாளர், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். அம்பத்தூர் மண்டலம், 86வது வார்டில் மண்ணூர்பேட்டை பகுதியில் பிள்ளையார் கோயில் தெரு, குயவர் தெரு, புதிய பிள்ளையார் கோயில் தெரு, காமராஜர் நகர் ஆகியவை அமைந்துள்ளன. மேற்கண்ட பகுதியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  பொதுமக்கள் வசிக்கின்றனர். மேலும், இப்பகுதியில் இருந்து அம்பத்தூர் சிட்கோ  தொழிற்பேட்டை, பட்டரைவாக்கம் கிராமத்திற்கும் பிரதான சாலை செல்கிறது. மேற்கண்ட சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான  தொழிலாளர்கள், கிராம பொதுமக்கள் சென்று வருகின்றனர். மேற்கண்ட பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் பராமரிப்பின்றி சேதமடைந்த கிடைக்கின்றன. குறிப்பாக, பிள்ளையார் கோயில் தெரு, அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டை சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டத்திற்காக குழாய்கள் பதிக்க ராட்சத பள்ளங்கள் தோண்டப்பட்டன. அதன் பிறகு, அந்த சாலையை  முறையாக சீரமைக்காமல் ஒப்பந்ததாரர் விட்டு சென்றார். இதனால், தற்போது பெய்து வரும் மழையால் சாலைகள் சேறும், சகதியுமாக மாறி கிடக்கின்றன. இதன் காரணமாக மேற்கண்ட பகுதிகளில் சாலைகளில் பொதுமக்கள், தொழிலாளர்கள் செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டை சாலை மற்றும் மண்ணூர்பேட்டையில் உள்ள சாலைகளில் தொழிற்சாலைகள், சிறு கம்பெனிகள், இரும்பு குடோன்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் ஏராளமான  குடியிருப்புகளும் அமைந்துள்ளன. இந்த சாலையை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி தங்களது பணிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர். இச்சாலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டத்திற்காக குழாய்கள் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டது. அதன் பிறகு அந்த பள்ளத்தை சரியாக மணல் கொண்டு மூடாமல் அரைகுறையாக விட்டு சென்றுள்ளனர்.இதனால் தற்போது பெய்து வரும் பருவமழையால் பாதாள சாக்கடைக்கு தோண்டிய பள்ளங்கள் சேறும், சகதியுமாக மாறி கிடக்கின்றன. சில இடங்களில் சாலைகள் புதைகுழிகள் போல் மாறி உள்ளன. இதனால், மேற்கண்ட சாலைகளில் வாகன  ஓட்டிகள் செல்ல முடியவில்லை. இதனையும் மீறி சென்றால் சாலையோர பள்ளத்தில் கார், வேன், லாரி உள்ளிட்ட வாகனங்களின் டயர்களில் சிக்கி கொள்கின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மற்ற வாகனங்களும் அறவே செல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டு வருகிறது. மேலும், இச்சாலையில் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் சரியான நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.

இதோடு மட்டுமல்லாமல் சேறும், சகதியுமான சாலையால் முதியோர், பெண்கள், சிறுவர்கள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். சில நேரங்களில் அவர்கள் சேறும் சகதியுமான சாலையில் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். அதோடு  மட்டுமல்லாமல், அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் கூட செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இதனால் பொருட்சேதமும், உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், கம்பெனிகளுக்கு சரக்குகளை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களும் சாலையில் செல்லமுடியாமல் தவிக்கின்றன. இதனால் தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களை சரியான நேரத்துக்கு கொண்டு செல்ல முடியவில்லை. தொழிற்சாலைகளில் இருந்து உற்பத்தியாகும் பொருட்களையும் சாலை வழியாக கொண்டு கொண்டு செல்லமுடியாமல் திணறி வருகின்றனர். மேற்கண்ட சாலைகளை சீரமைக்க கோரி சமூக ஆர்வலர்கள் பலமுறை அம்பத்தூர் மண்டல  அதிகாரிகளுக்கு புகார்கள் அனுப்பி உள்ளனர். இருந்த போதிலும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். இதனால் தொழிலாளர்கள் பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் தினமும் சிரமத்துக்கு ஆளாகி  வருகின்றனர். எனவே இனி மேலாவது, அம்பத்தூர் மண்டல நிர்வாகம் கவனித்து அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டை மற்றும் மண்ணூர்பேட்டை பகுதியில் உள்ள பழுதடைந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இல்லாவிட்டால் தொழிலாளர்களும் பொதுமக்களும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்’’ என்றனர்.

Related Stories: