அரபிக்கடலில் புயல் சின்னம்: கன்னியாகுமரி, தூத்துக்குடிக்கு 10 குழுக்கள் அனுப்பி வைப்பு: மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை

சென்னை : அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக கன்னியாகுமரி, தூத்துக்குடியில் மீட்பு பணிகளை மேற்கொள்ள 10 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 27ம் தேதி வெளியிடப்பட்டுள்ள வானிலை அறிக்கையில், தென்மேற்கு வங்க கடல் மன்னார் வளைகுடா, குமரி கடல், தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத் தீவு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வானிலை எச்சரிக்கை தொடர்பான விரிவான செய்தி குறிப்பு அனைத்து மீனவர் சங்கங்கள், மீனவ பிரதிநிதிகள் மற்றும் பங்கு தந்தையர்களுக்கு எழுத்து மூலம் வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மீன்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, லட்சத்தீவுகள் மற்றும் குஜராத் மாநில மீன்துறை இயக்குநர்களுக்கு அப்பகுதியில் உள்ள மீன்பிடிப்பு படகுகளை கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்குமாறு கோரியும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள புதிய புயல் சின்னத்தை தொடர்ந்து சிறப்பு புயல் முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்வதற்கென மீன்துறை கூடுதல் இயக்குநர் தலைமையில் 35 துறை அலுவலர்களைக் கொண்ட 10 குழுக்கள் அமைக்கப்பட்டு கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் தொடர்புடைய பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து புயல் முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொள்வர்கள்.

Related Stories: