போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் திரிந்த மாடுகளின் உரிமையாளரிடம் 40 லட்சம் அபராதம் வசூல்: மாநகராட்சி தகவல்

சென்னை: போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் திரிந்த மாடுகளின் உரிமையாளர்களிடமிருந்து ரூ.40 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. ஒரு சில நேரங்களில் விபத்தும் ஏற்படுகிறது. இந்நிலையில் விதிகளை மீறி மாடுகளை சாலையில் விடும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும்  நடைமுறையை 2017ம் ஆண்டு சென்னை மாநகராட்சி அமல்படுத்தியது.

அதன்படி  மூன்று வயதிற்குட்பட்ட கால்நடைகளுக்கு ரூ.1000ம், மூன்று வயதிற்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு ரூ.1250ம் அபராதம் நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும், பராமரிப்பு செலவாக நாளொன்றுக்கு ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டது.  இவ்வாறு பிடிக்கப்படும் மாடுகள் புதுப்பேட்டை மற்றும் பெரம்பூர் மாட்டுத் தொழுவங்களில் அடைக்கப்பட்டன.

இதன்படி கடந்த 2018ம் ஆண்டு வரை  7206 மாடுகள் பிடிக்கப்பட்டு, ரூ.1.13 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அபராதத் தொகை உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் அபராதம்  உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி அபராதத் தொகை ரூ.10,000 என நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும் பராமரிப்பு செலவாக நாள் ஒன்று ரூ.750ம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் சாலையில் மாடுகளை திரிய விட்ட 443 உரிமையாளர்களிடமிருந்து ரூ.39.95 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக  பெருங்குடி, திருவல்லிக்கேணி, மந்தைவெளி ஆகிய இடங்களில் அதிக அளவில் விதிமீறல் இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் ெதரிவித்துள்ளனர். மேலும், மாநகராட்சியால் பிடிக்கப்படும் கால்நடைகளுக்கு அடையாளமாக காதுமடலில் வரிசை எண்கள் அடிப்படையில் முத்திரை வில்லை பொருத்தப்படும் என்றும்,  முத்திரை வில்லை பொருத்தப்பட்ட கால்நடைகள் மீண்டும் பிடிக்கப்பட்டால்,  அவைகள் தன்னார்வ  தொண்டு நிறுவனங்களிடம் உரிய முறையில் ஒப்படைக்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: