மெட்ரோ ரயில் ஊழியர்களின் தொழில் தகராறுகளுக்கு தமிழக தொழிலாளர் நல ஆணையரை அணுக வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களின் தொழில் தகராறுகள் தொடர்பாக தமிழக தொழிலாளர் நலத்துறை ஆணையரையே  அணுக வேண்டும், என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் தொடர்பான பிரச்னைகள் மத்திய தொழிலாளர் ஆணையரை தான் அணுக வேண்டுமென மத்திய அரசு 2009ல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர்  தொடர்ந்த வழக்கில், மத்திய அரசின் உத்தரவிற்கு தடை விதிக்கப்பட்டது.

 இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் சங்கத்தினர்,  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக கூறி,  மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கும், மத்திய தொழிலாளர் ஆணையருக்கும்  நோட்டீஸ் அனுப்பினர்.

 அந்த நோட்டீஸை பரிசீலித்த மத்திய தொழிலாளர் ஆணையர், சென்னை உயர் நீதிமன்றம் தடையை சுட்டிக்காட்டி, தமிழக அரசின்  தொழிலாளர் நல ஆணையரை அணுக உத்தரவிட்டுள்ளார்.  இந்த இந்த உத்தரவை ரத்து செய்யவும், பேச்சுவார்த்தை நடத்த  மத்திய தொழிலாளர் ஆணையருக்கு உத்தரவிட கோரியும் சென்னை மெட்ரோ ரயில் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாணைக்கு வந்தது. அப்போது, மத்திய - மாநில அரசு இணைந்து செயல்படுத்திய திட்டம் என்பதாலும், பொது மேலாளர், இயக்குனர் உள்ளிட்ட பதவிகளை மத்திய அரசே  நிரப்புவதாலும், தொழில் தகராறுகள் சட்டத்தின் கீழான விவகாரங்களை மத்திய  தொழிலாளர் ஆணையரே கையாள வேண்டுமென  ஊழியர் சங்கத்தின் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில், மத்திய அரசு 20 சதவீதம், மாநில அரசு 20.78 சதவீதம் நிதி பங்களிப்புடனும், ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையின் 59.22 சதவீத கடனுதவியுடனும் இந்த  திட்டம் செயல்படுத்தபட்டுள்ளதால், தொழில் தகராறுகள் சட்டம் தொடர்பான பிரச்னைகளை தமிழக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தான் விசாரிக்க முடியும் என்று வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், மெட்ரோ ரயிலுக்காக சிறப்பு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் அமைக்கும் ஒப்பந்தத்திலேயே இழப்புகளுக்கு மாநில அரசே நிதி வழங்க வேண்டுமெனவும்,  கூடுதல் செலவுகளையும் ஏற்க வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படுவதாலும், தமிழக எல்லைக்குள்ளேயே இயக்கபடுவதாலும், இதை மத்திய அரசு நிர்வகிக்கும் நிறுவனமாக கருத முடியாது. எனவே, தொழில் தகராறுகள் சட்டப்படி,  மாநில அதிகாரிகள் விசாரிக்க அதிகாரம் உள்ளது. ஏற்கனவே பேச்சுவார்த்தை நடைமுறைகள் தொடங்கி நிலுவையில் இருந்தால், அதை மீண்டும் தொடர அனுமதி அளிக்கப்படுகிறது. இதன்படி 2009ம் ஆண்டு மெட்ரோ ரயில் நிர்வாகம் தொடர்ந்த வழக்கும், இந்த ஆண்டு ஊழியர் சங்கம்  தொடர்ந்த வழக்கும் முடித்து வைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

Related Stories: