மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல் பகுதிகளுக்கு அக். 31ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் : வானிலை ஆய்வு மைய இயக்குனர் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், தென் தமிழகத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, மதுரை, புதுக்கோட்டையில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய கூடும் என்றும் வடதமிழகத்தில் திருவள்ளூர், திருவண்ணாமலை விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் என்றும் இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

இதனிடையே மணப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் மணப்பாறை பகுதியில் நிலவி வரும் வானிலை  குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து, அங்குள்ள மீட்பு படையினருக்கு தெரிவித்து வருகிறோம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு நிலை கொண்டுள்ளது என்று குறிப்பிட்ட நிலையில், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடல் பகுதிகள், குமரிக்கடல் பகுதி மற்றும் மாலத்தீவு, லட்சத் தீவுப் பகுதிகளில் 28,29,30,31 ஆகிய தேதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம், விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ. மழைப்பதிவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மற்றும் ராமேஸ்வரத்தில் தலா 5 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது. 

Related Stories: