பல்வேறு இடங்களிலுள்ள துணை மின்நிலையங்களை 17.65 கோடி செலவில் நவீனமயமாக்க திட்டம்: சீரான மின்விநியோகத்திற்காக வாரியம் நடவடிக்கை

சென்னை: தமிழகத்தில் சீரான மின்தடையை வழங்கும் வகையில், பல்வேறு இடங்களிலுள்ள துணைமின்நிலையங்களை 17.65 கோடி செலவில் நவீனமயமாக்க மின்சாரவாரியம் திட்டமிட்டுள்ளது.  மாநிலத்தில் 2.90 கோடிக்கும் மேலான மின்இணைப்புகள் உள்ளன. இவற்றுக்கான மின்சாரத்தை அனல், நீர், காற்றாலை, சூரியசக்தி உள்ளிட்டவற்றின் மூலமாக தயாரித்து மின்சாரவாரியம் வழங்கி வருகிறது. தற்போதைய நிலவரப்படி உட்சபட்ச மின்தேவையின் அளவு 11 ஆயிரம் மெகாவாட்டிற்கும் மேல் உள்ளது. தற்போதைய நிலவரப்படி மாநிலம் முழுவதும் 765 கி.வோல்ட் துணைமின்நிலையம்-4; 400 கி.வோல்ட்-26; 230 கி.வோல்ட்-104; 110கி.வோல்ட்-876; 66 கி.வோல்ட்-3; 33 கி.வோல்ட்-669 என மொத்தம் 1,682 துணைமின்நிலையங்கள் உள்ளன. பலஇடங்களில் உள்ள இத்தகைய மின்நிலையங்கள் நீண்ட நாட்களுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்டன. இதனால் அதில் உள்ள சில உபகரணங்கள் பழமையானதாகவுள்ளது. மேலும் அடிக்கடி பழுதும் ஏற்படுகிறது.

குறிப்பாக மழைகாலங்களில் நீண்ட நேரம் தண்ணீரிலேயே சாதனங்கள் இருப்பதால், அவை உடனடியாக பழுதடைந்து விடுகிறது. இதேபோல் வெயில் காலங்களிலும் பழமையான சாதனங்கள் எளிதாக சேதமடைந்து விடுகின்றன. இதனால் மின்தடை ஏற்படுகிறது. அப்போது நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். மேலும் ஒருசில இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிடுகிறது. இதனால் ஆத்திரமடையும் பொதுமக்கள், அவ்வப்போது வாரியத்தை கண்டித்து போராட்டம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். எனவே இதுபோன்ற பிரச்னைகளை கட்டுப்படுத்தும் வகையிலும், துணைமின்நிலையங்களில் நவீன வசதிகளை ஏற்படுத்தும் வகையிலும் அவ்வப்போது துணைமின்நிலையங்களில் உள்ள பழைய உபகரணங்கள் மாற்றம் செய்யப்படும். அப்போது நவீன தொழில்நுட்பங்களை கொண்ட புதிய சாதனங்கள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்படுவது வழக்கம். இதன்மூலம் ஓரளவிற்கு மின்தடையை குறைக்க முடியும். அதன்ஒருபகுதியாக பல்வேறு இடங்களில் உள்ள துணைமின்நிலையங்களை 17.65 கோடி செலவில் நவீனமயமாக்க மின்சாரவாரியம் திட்டமிட்டுள்ளது. தற்போது இதற்கான முதற்கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:மின்வாரியமானது அவ்வப்போது ஆங்காங்குள்ள துணைமின்நிலையங்களில் பராமரிப்புப்பணி மேற்கொள்ளப்படுவது வழக்கம். அப்போது அவை புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய நவீன துணைமின்நிலையமாக மாற்றப்படும்.

அதன்ஒருபகுதியாக ஆரணி 230/110கி.வோல்ட், கடப்பேரி 230/110/11 கி.வோல்ட், விழுப்புரம் 230/110 கி.வோல்ட், கயத்தாறு 230/110கி.வோல்ட், ஸ்ரீபெரும்புதூர் 400/230-110கி.வோல்ட் துணைமின்நிலையங்களில் இப்பணிகள் நடக்கிறது. இதற்காக 17.65 கோடி வரை செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. பணியின் போது பல்வேறு நவீனவசதிகள் சம்மந்தப்பட்ட துணைமின்நிலையங்களில் புகுத்தப்படும். இதன்மூலம் மின்தடை உள்ளிட்ட பிரச்னைகள் அடிக்கடி ஏற்படாது. மேலும் புதிய தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வரும்போது, மின்தடை ஏற்படும் பகுதியில் மட்டுமே மின்சாரம் தடைபடும். மற்றபகுதிகளில் மின்தடை இருக்காது. மேலும் எந்த இடத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது என்பது குறித்த சரியான இடத்தையும் மின்வாரிய தொழிலாளர்களுக்கு காட்டிவிடும். இதன்மூலம் பழுது ஏற்பட்டுள்ள இடத்தை தேட வேண்டிய சிக்கல் இருக்காது. எளிதாக சம்மந்தப்பட்ட பழுதை ஊழியர்களால் நீக்கிவிட முடியும். இதுபோன்ற ஏராளமான நன்மைகள் நுகர்வோருக்கும், மின்வாரியத்திற்கும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories: