மத்திய அரசு 6 கல்லூரிகளுக்கு அனுமதி 1089 கோடியில் 3 மருத்துவ கல்லூரிகள் அமையும் இடங்கள் தேர்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல்

சென்னை: நாடு முழுவதும் 2020-2021ம் நிதியாண்டில் 75 புதிதாக மருத்துவ கல்லூரிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, அந்தந்த மாநில அரசுகள் சார்பில் அறிக்கை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதில், தமிழக அரசு சார்பில் நீலகிரி, திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கு அறிக்கை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.இந்த நிலையில் மேலும், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, மற்றும் நாகை மாவட்டங்களில் 3 மருத்துவகல்லூரி உடன் கூடிய மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதில், ஒவ்வொரு மருத்துவக்கல்லூரிகளுக்கு தலா 150 சீட்டுகள் வீதம் 450 சீட்டுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கல்லூரிகளுக்கான இடம் தேர்வு செய்யும் பணியில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பெரும்பாக்கத்தில் 21.42 ஏக்கரில் ₹385.63 கோடி செலவில் மருத்துவக்கலூரி மற்றும் மருத்துவமனை, நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூரில் 60 ஏக்கரில் ₹366.85 கோடி செலவில் மருத்துவ கல்லூரி உடன் கூடிய மருத்துவமனை, கிருஷ்ணகிரி மாவட்டம் பொல்லப்பள்ளியில் 25 ஏக்கரில் 336.95 கோடியில் மருத்துவகல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது.இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து அனுப்பி வைக்குமாறு மருத்துவகல்வி இயக்குனர் நாரயணபாபு தமிழக பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜாமோகனுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினார். அதன்பேரில், சென்னை மண்டல மருத்துவ கட்டுமான பிரிவு கண்காணிப்பு பொறியாளர் பாண்டியராஜன் தலைமையிலான பொறியாளர்கள் கொண்ட குழுவினர் 3 கல்லூரி அமைப்பதற்கான கட்டுமான பணிக்கு திட்ட அறிக்கை தயார் செய்தனர்.

இந்த அறிக்கை தற்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் என்கிற அடிப்படையில் நிதி பெறப்பட்டு 3 மருத்துவக்கல்லூரி உடன் கூடிய மருத்துவமனை கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: