கொரட்டூர் ஏரியில் மீன்கள் இறந்த விவகாரம் கழிவுநீர் கலக்கும் கால்வாயை தலைமைச்செயலாளர் ஆய்வு: கழிவுகளை 15 நாளில் அகற்ற உத்தரவு

அம்பத்தூர்: கொரட்டூர் ஏரியில் ரசாயன கழிவுநீர் கலக்கும் கால்வாயை அதிகாரிகளிடம் சென்று தலைமை செயலாளர் சண்முகம் ஆய்வு செய்தார். அப்போது ஏரியில் ரசாயன கழிவுநீர் கலக்காமல் தடுக்க மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு அதிரடி  உத்தரவு பிறப்பித்தார். கொரட்டூர் ஏரி 250 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி கொரட்டூர் கள்ளிக்குப்பம், மேனாம்பேடு, கருக்கு, மாதனங்குப்பம் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு நீராதாரமாக விளங்கி  வருகிறது. ஏரியில் கடந்த சில ஆண்டுகளாக கழிவுநீர் கலந்து மாசு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலை மற்றும் ஏற்றுமதி ஆடை நிறுவனங்களில் இருந்து ரசாயன கழிவுநீர் ஏரிக்கு  செல்லும் மழைநீர் கால்வாயில் விடப்படுகிறது. இதனால் ஏரியில் வசிக்கும் மீன்கள் அடிக்கடி இறப்பது, கால்நடைகள் பல்வேறு வகையான நோயால் பாதிக்கப்பட்டன.

இதையடுத்து கடந்த 3 ஆண்டுக்கு முன்பாக சமூக ஆர்வலர்கள் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து ஏரியில் கலக்கும் கழிவுநீரை தடுத்தனர். ஆனாலும் தற்போது மீண்டும் கழிவுநீர் கால்வாய் வழியாக ஏரிக்குள் கலந்து வருகிறது.

எனவே கொரட்டூர் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து ஏரியில் விட சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கோரியும் கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று மதியம் தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வடிகால் துறை நிர்வாக இயக்குனர் பிரபு சங்கர், பொதுப்பணித்துறை  மேற்பார்வை பொறியாளர் முத்தையா, மாசுகட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் இந்திரா ஆகியோர் கொரட்டூர் ஏரி பகுதிக்கு வந்தனர். பின்னர், அதிகாரிகள் குழுவினர் கருக்கு, டி.டி.பி காலனி பகுதியில் உள்ள ரசாயன கழிவுநீர் கலந்த  மழைநீர் கால்வாயை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது மழைநீர் கால்வாயில் உள்ள ரசாயன கழிவுகளை 15 நாளில் அகற்ற நடவடிக்கை எடுக்க மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவு பிறப்பித்தனர். மேலும், சுத்திகரிப்பு நிலையம் அமைத்திட நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி  அளித்தனர். ஆய்வின்போது அம்பத்தூர் மண்டல அதிகாரி தமிழ்ச்செல்வன், செயற்பொறியாளர்கள் சதீஷ்குமார், சுந்தரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: