வன சட்டத்தில் திருத்தம் செய்யும் மத்திய அரசு பரிந்துரை நிராகரித்தது மிசோரம்

அய்சால்: இந்திய வனச்சட்டம்- 1927ல் திருத்தம் மேற்கொள்வதற்கான மத்திய அரசின் பரிந்துரைகளை மிசோரம் மாநில அரசு நிராகரித்துள்ளது. ‘இந்திய வனச்சட்டம்- 1927’ல் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  இதுதொடர்பான பரிந்துரைகளை மத்திய வனத்துறை அமைச்சகம் தயாரித்து, மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்டுள்ளது. இச்சட்ட திருத்தத்தில், வனங்களில் வாழும் பழங்குடி மக்களை குற்றவாளிகளாக சித்தரிக்கும் அம்சங்களும், வனத்தில்  கிடைக்கும் மரங்கள், இயற்கை வளங்கள் மற்றும் கனிமங்கள் அரசின் சொத்துக்களாக அறிவிக்கப்படுவதாகவும் உள்ளன.

இதனால் நாடு முழுவதும் இச்சட்ட திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் மிசோரம் மாநிலத்தில் இச்சட்ட திருத்தம் குறித்த அரசின் கருத்து கேட்பு கூட்டம் கடந்த வாரம்  நடைபெற்றது. இதில் அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்பினர், சமூக அமைப்புகள், தேவாலய நிர்வாகங்கள் பங்கேற்றன. கூட்டத்தில், மத்திய அரசின் சட்டத்திருத்த வரைவானது, மிசோரம் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ள சட்டப்பிரிவு 371(ஜி)  சிறப்பு அந்தஸ்தை பாதிக்கும் வகையில் இருப்பதாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதைத் தொடர்ந்து மிசோரம் மாநில சுற்றுச்சூழல் துறை செயலாளர் அஜய் சக்சேனா, மத்திய வனத்துறை அமைச்சகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில்  வனச்சட்ட திருத்த பரிந்துரைகளை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார்.

Related Stories: