நெற்பயிரை நாசம் செய்த பெண் டிஎஸ்பிக்கு 5 லட்சம் அபராதம் : மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த காமக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை, இவரது தம்பி தியாகராஜன். இருவரும் விவசாயிகள். இவர்களது குடும்பத்துக்கு சொந்தமாக 16 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தின் உரிமை தியாகராஜனின் மகள் சாமுண்டீஸ்வரி பெயரில் உள்ளதாகவும் பின்னர் முறையாக பாகப்பிரிவினையும் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் சுமார் ஒன்றே முக்கால் ஏக்கர் நிலம் தொடர்பான பிரச்னை சாமுண்டீஸ்வரிக்கும், அண்ணாமலை மகள் சாவித்திரிக்கும் இடையே இருந்தது. இதுதொடர்பாக ஆரணி சப்-கோர்ட்டில் 2014 முதல் வழக்கு நடந்து வருகிறது. அந்த நிலத்திலும் சாவித்திரி விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், சொத்தின் உரிமை தன்னிடம் இருப்பதாக கூறி சாமுண்டீஸ்வரி வேலூர் டிஐஜி வனிதாவிடம் புகார் அளித்தார். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி களம்பூர் போலீசாருக்கு டிஐஜி வனிதா உத்தரவிட்டார். அதன் பேரில் டிஎஸ்பி ஜெரீனா பேகம் மற்றும் களம்பூர் போலீசார் காமக்கூர் சென்று சாவித்திரி மற்றும் சாமுண்டீஸ்வரி தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் நிலத்தை சமன்படுத்தவும் முயன்றுள்ளனர். அப்போது சாவித்திரி தரப்பும், காமக்கூர் கிராம மக்களும் சேர்ந்து பயிரிட்டு அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்களை நாசம் செய்யக்கூடாது என்று கூறி தடுத்துள்ளனர். அப்போது சாவித்திரி டிஎஸ்பி ஜெரீனாபேகத்தின் காலில் விழுந்து கதறியுள்ளார். ஆனால் அவரை தள்ளி விட்டுள்ளார். நெற்பயிரை நாசம் செய்யலாமா என்று கேட்டதற்கு, என்னையே எதிர்த்து பேசுகிறாயா, நீ எங்கு வேண்டுமானாலும் போ. என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி நிலத்தை டிராக்டரை கொண்டு தொடர்ந்து சமன்படுத்த டிஎஸ்பி உத்தரவிட்டார்.

இதுதொடர்பான செய்தி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தினகரன் நாளிதளிழில்  வெளிவந்தது.  இந்த செய்தி அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் டிஎஸ்பி மனித உரிமை மீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. எனவே பெண் டிஎஸ்பி ஜெரீனாபேகத்துக்கு ரூ.5 லட்சம் அபராதமும், துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்க நீதிபதி துரை.ெஜயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: