சிறுவர்கள் போதைக்கு அடிமையாகும் விவகாரம் 30 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 65 அதிகாரிகள் மீது நடவடிக்கை : தேசிய குழந்தைகள் ஆணையம் அதிரடி

சென்னை: சிறுவர்கள் போதைக்கு அடிமையாகும் விவகாரம் தொடர்பாக 30 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 65 அதிகாரிகள் மீது தேசிய குழந்தைகள் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய குழந்தைகள் ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் அளித்த பேட்டி: தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் போதை பழக்கத்திற்குள்ளான சிறுவர்கள் ‘கேன்சர்’ நோய்க்கு பயன்படுத்தப்படும் ஒருவித மருந்தை ஊசி மூலம் உடலில் செலுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரூ.12க்கு விற்கப்படும் அந்த மருந்தை வாங்கி தண்ணீரில் கலந்து ஊசி மூலம் உடலில் ஏற்றியுள்ளனர். இதனால் ஒருநாள் முழுவதும் ேபாதை கிடைத்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த மருந்து சிறுவர்களுக்கு எப்படி கிடைத்தது என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. தமிழகத்தில் இந்த மருந்தின் தேவை என்பது மிகவும் குறைவுதான். மற்ற மாநிலங்களிலும் குறைவுதான். வெளிநாட்டிலேயே 1000 என்ற அளவில்தான் இந்த மருந்து வழங்கப்பட்டு வருகிறது. அப்படியிருக்கும் போது இந்த மருந்து தமிழகத்திற்குள் எப்படி வந்தது என்பது தொடர்பாக அதிரடி விசாரணை நடத்தப்பட்டது.

முதல்கட்ட விசாரணையில், திருப்பூரில் இருந்து வந்ததாக தெரியவந்தது. அப்போது கேரளாவில் இருந்து மருந்து வந்ததாக தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக தேசிய குழந்தைகள் ஆணையம் முழுவீச்சில் விசாரணை நடத்தி வருகிறது. இதேபோல நாடு முழுவதும் போதைக்கு அடிமையான சிறுவர்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதில் 20 மாநிலங்களில் போதைக்கு அடிமையான சிறுவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்த புகார்கள் மீது 30 மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் கண்காணிப்பாளர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பலர் இடமாற்றத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

இன்று (நேற்று) கூட போதை மருந்து தொடர்பாக இந்தியா முழுவதும் 12 அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தேசிய குழந்தைகள் ஆணையம் பவர் தெரியாமல், மாநிலங்களில் உள்ள அதிகாரிகள் சிறுவர்கள் போதைக்கு அடிமையாவதை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். தற்போது தேசிய குழந்தைகள் ஆணையம் தனது பவரை காட்ட தொடங்கியுள்ளது. அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல நாடு முழுவதும் குழந்தைகள் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: