தமிழகம் முழுவதும் அதிரடி வேட்டை 17 அரசு அலுவலகங்களில் 19.80 லட்சம் பறிமுதல் : லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை

சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வருவாய் வரும் 17 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத 19.80 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழக அரசின் வருவாய் வரும் துறைகளான சார் பதிவாளர் அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், டாஸ்மாக் கடைகள், வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொழில் நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள், புரோக்கர்கள் சார்பில் அன்பளிப்பாக பணம், பட்டாசு, பரிசு பொருட்கள், துணிகள் வழங்கப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்தது. அதைதொடர்ந்து  கடந்த வாரம் முதல் தமிழகம் முழுவதும் வருவாய் தரும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 22ம் தேதி வரை தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் நடந்த அதிரடி சோதனையில் கணக்கில் வராத 15 லட்சத்து 24 ஆயிரத்து 586 ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், கடந்த 23 மற்றும் 24ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் 17 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக, சென்னை அம்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் அதிகபட்சமாக 4,67,300, வடசென்னை மாவட்ட தீயணைப்பு அதிகாரி அலுவலகத்தில் 1,60,000, செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 85,510, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் 1,45,440, கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 1,05,950, பெரம்பலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் 55,090 என 17 அரசு அலுவலகங்களில் இருந்து கணக்கில் வராத 19 லட்சத்து 80 ஆயிரத்து 105 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி வேட்டை தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

Related Stories: