நவம்பர் 1ம் தேதி தமிழ்நாடு நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 1ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்றும், அதற்காக ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: சுதந்திர இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட மெட்ராஸ் ஸ்டேட் என்று அழைக்கப்பட்ட நிலப்பரப்பை தமிழ்நாடு என பெயர் மாற்றக்கோரி போராட்டங்கள் நடைபெற்றது. இதையடுத்து முதல்வராக அண்ணா இருந்தபோது, 1967ம் ஆண்டு மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற தீர்மானம் சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 1-11-1956ம் நாளை பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 1ம் தேதி தமிழ்நாடு நாள் என்ற பெயரில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த விழாவை நடத்திட ரூ.10 லட்சம் அனுமதித்து அதற்கான செலவின விவரங்களை தமிழ் வளர்ச்சி துறை அறிவித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு ஆண்டு தமிழ்நாடு நாள் கொண்டாட ரூ.10 லட்சம் ஒப்பளிப்பு செய்து அரசு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.அதன்படி, வருகிற நவம்பர் 1ம் தேதி `தமிழ்நாடு நாள்’’ முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள், மொழி காவலர்கள், தமிழறிஞர்கள், தமிழ் அமைப்புகள், தமிழ் ஆர்வலர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்கும் வகையில் விழா நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: