கோயம்பேடு பஸ் நிலையத்தில் தீபாவளி சிறப்பு பஸ்கள் முன்பதிவு மையம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான பயணச்சீட்டு சிறப்பு முன்பதிவு மையங்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  நேற்று தொடங்கி வைத்தார். பின்னர், அவர் பேட்டியளிக்கையில், ‘‘இந்த முறை 8 லட்சம் பயணிகள் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் 6 இடங்களில் இருந்து பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காரில் பயணம் செய்பவர்கள் இ.சி.ஆர், செங்கல்பட்டு வழியாக செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆம்னி பஸ்கள் அதிக கட்டணம் தொடர்பான புகார்கள் இருந்தால் 1800-4256151 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். போக்குவரத்து கழகங்களில் உள்ள புகார்களை தெரிவிக்க 94450-14450, 94450-14436 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். தீபாவளி பண்டிகைக்காக 21 ஆயிரத்து 581 பஸ்களும், ஊர்களில் இருந்து திரும்பி வருவதற்காக 22 ஆயிரத்து 587 பஸ்களும் இயக்கப்படும்.

போக்குவரத்து ஊழியர்களுக்கு போனஸ் இன்று வழங்கப்படும்’’ என்று கூறினார்.தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தொடங்கப்பட்டுள்ள முன்பதிவு மையங்கள் வாயிலாக 1,39,286 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.  இதன் மூலம் ₹6.81  கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றம் வழியாக ஆந்திராவுக்கு அனைத்து தமிழக மற்றும் ஆந்திர மாநில பேருந்துகள் இயக்கப்படும். கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை  வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் வரை செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். தாம்பரம்  சானடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக செஞ்சி மற்றும் திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், வந்தவாசி, சேத்துப்பட்டு, போளூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம்,  காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம், செய்யாறு, ஆற்காடு, ஆரணி, வேலூர், திருப்பத்தூர், ஓசூர், சித்தூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.  பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு எம்.ஜி.ஆர்.பேருந்து நிலையத்திலிருந்து இந்த நான்கு பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக இணைப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

கோயம்பேடு எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை,  திண்டுக்கல், விருதுநகர்,  திருப்பூர், ஈரோடு,  ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம், பெங்களூர் மற்றும் ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

Related Stories: