சென்னை மருத்துவக் கல்லூரியிலும் நீட் ஆள்மாறாட்டம் மூலம் மாணவர் சேர்க்கை: காவல் நிலையத்தில் மருத்துவ நிர்வாகம் புகார்

சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல முறைகேடான செயல்களில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தேனி மருத்துவ கல்லூரி மாணவன் உதித்சூர்யா ஆள்மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை  தொடர்ந்து அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் மாணவர்களின் சேர்க்கை ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வந்தன. அந்த வகையில், இர்பான்  உள்ளிட்ட பல்வேறு மாணவர்கள் ஆள்மாறாட்ட முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலமானது.

இவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மாணவன் உதித்சூர்யாவுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து  மருத்துவக் கல்வி இயக்குனரகம் நீட் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக பல்வேறு கட்ட  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த  வகையில், கடந்த 14ம் தேதி மாலை 5 மணி அளவில் அனைத்து மருத்துவக்கல்லூரி முதல்வர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில்,  15,16,17 ஆகிய 3 நாட்களுக்குள் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீடு மற்றும் அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களின்  இரண்டு கட்டைவிரல் ரேகையை பதிவு செய்யவேண்டும் என உத்தரவிட்டது. பதிவு செய்த கைரேகைகள் உள்ள ஆவணத்தில் கல்லூரி முதல்வர்  மற்றும் மருத்துவத்துறை பேராசிரியர்கள் கையெழுத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

கடந்த 17-ம் தேதிக்குள் அனைத்து மாணவர்களின் கைரேகைகளை பெற்று இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டது. இதேபோல, தேசிய  தேர்வு முகமையிடம் இருந்து தேர்வின் போது மாணவர்கள் வைத்த கைரேகைகளை தருமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக , சுகாதாரத்துறை மூலமாக தேசிய தேர்வு முகமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆவணங்களும் ஓரிரு  தினங்களில் வரவுள்ளது. இரு கைரேகை ஆவணங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் நடவடிக்கையில் கல்வி இயக்குனரகம் ஈடுபட உள்ளது. இதன் மூலம்  வேறு ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என்பது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

இந்நிலையில், சென்னை ராஜூவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் நீட் ஆள்மாறாட்டம் மூலம் மாணவர் சேர்ந்தது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதாகக் கூறி கல்லூரியில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர் மீது  சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து, முதலாம் ஆண்டு மாணவருக்கு எதிராக சென்னை காவல் நிலையத்தில் மருத்துவ அதிகாரி புகார்  அளித்துள்ளார். புகாருக்கு உள்ளான மாணவர் பீகாரில் நீட் தேர்வு எழுதி சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தவர் எனத் தகவல்  தெரிவிக்கப்படுகிறது.

Related Stories: