விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை: 9 மணிக்கே முன்னணி நிலவரம் தெரியும்

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் நா.புகழேந்தி, அதிமுக சார்பில் முத்தமிழ்செல்வன், நாம் தமிழர் கட்சி  சார்பில் கந்தசாமி உள்ளிட்ட 12 பேர் போட்டியிட்டனர். நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன், அதிமுக சார்பில் நாராயணன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜநாராயணன் உள்ளிட்ட 23 பேர் களத்தில் உள்ளனர்.  விக்கிரவாண்டி தொகுதியில் 81.41 சதவீத வாக்குகளும், நாங்குநேரி தொகுதியில் 66.35 சதவீதம் வாக்குகளும் பதிவாகின.இந்த இரண்டு தொகுதிகளில் பதிவான வாக்குகள் (மின்னணு வாக்கு இயந்திரங்கள்) பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. .

இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நேற்று அளித்த பேட்டி: காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். தொடர்ந்து 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். வாக்குகளை எண்ண 14 மேஜைகள் போடப்பட்டுள்ளது. ஒரு ரவுண்டு எண்ணி  முடிக்க ஒரு மணி நேரம் ஆகும். இதையடுத்து காலை 9 மணியில் இருந்து 10 மணிக்குள் முதல் ரவுண்டு முடிவுகள் தெரியவரும். இரண்டு தொகுதிகளில் தனித்தனியாக 5 மையங்களில் பதிவான வாக்குகள் விவிபேட் இயந்திரத்தில் எண்ண  தனியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த 5 இயந்திரங்கள் ரேண்டம் முறையில் தேர்வு செய்யப்படும்.

வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு இயந்திரங்கள் வைத்துள்ள அறை மற்றும் வாக்கு எண்ணும் அறைகளில் துணை ராணுவ வீரர்கள் துப்பாக்கியுடன் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.  2வது அடுக்கில், மாநில போலீசார் துப்பாக்கி பாதுகாப்புடன் நிறுத்தப்படுவார்கள். 3வது மற்றும் 4வது அடுக்கில் அந்த மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும்  மையங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: